சண்டைப்போடும் காதலர்களுக்கானப் படம்! - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் nbspவிமர்சனம்

Ispade Rajavum Idhaya Raniyum review

ஒருவர் மீது வைக்கப்படும் காதல், அளவுக்கு அதிகமானால் ஏற்படும் மனவிளைவுகளையும், உறவுச் சிக்கலையும் பேசியிருக்கும் காதலால் காதலாகி காதலில் உருகியிருக்கும் கதையே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

‘பியார் பிரேமா காதல்’ படத்துக்குப் பிறகு ஹரிஷ் கல்யாணுக்கும், ‘புரியாத புதிர்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடிக்கும், ‘காளி’ படத்துக்குப் பிறகு நாயகி ஷில்பாவுக்கும்  என அனைவருக்கும் இரண்டாவது படம் இது.  இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ரசிகர்கள் மனதை வென்றார்களா? 

வேலை வெட்டி எதுவும் இல்லாத தமிழ் சினிமாவின் வழக்கனான ரோடு சைடு ரோமியோவாக வருகிறார் கெளதம் (ஹரிஷ்கல்யாண்) . கெளதமின் அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிடுவதால் சிறு வயதிலேயே அம்மாவை இழக்கிறான். அதனால் அம்மாவை வெறுக்கும் கெளதம் கோவக்கார முரட்டு இளைஞனாக வளர்கிறான். மோதலும், பின் காதலுமாக நாயகி தாராவை (ஷில்பா மஞ்சுநாத்) சந்திக்கிறான் கெளதம். மார்டன் பெண்ணாக வரும் தாராவும், கோவக்கார இளைஞன் கெளதமும் காதலிக்கிறார்கள்.  ஒருகட்டத்தில் தாராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பொறுமையாக வீட்டில் எடுத்துப் பேசி சம்மதிக்க வைக்க நினைக்கிறாள் தாரா. ஆனால் முன்கோபத்தால் அனைத்தையும் பாழாக்குகிறான் கெளதம். இதனால் பிரியும் இருவரும் பின்பு சேர்ந்தார்களா, அவர்களின் காதல் என்னவானது, காதலில் ஏற்படும் உறவுச்சிக்கல்கள் என்ன என்பதை சொல்லியிருக்கும் படமே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். 

எதையும் யோசிக்காமல் யாரென்றாலும் போட்டு அடித்து உதைக்கும் கோவக்காரனாக வரும் ஹரிஷ் கல்யாண், நடிப்பிலும்  கவர்கிறார். நண்பர்களுடான காட்சிகளாகட்டும், காதல் காட்சிகளாகட்டும் இரண்டிலும் அதற்கான நடிப்பை சரியாக வழங்கியிருக்கார் ஹரிஷ். தேன் மிட்டாய் பாட்டிலை மண்டையில் உடைப்பது, நாயகி வீட்டு கண்ணாடியை உடைப்பது, பீர் பாட்டிலை உடைப்பது, இல்லையென்றால் யாருடைய விளா எழும்பையாவது உடைப்பது என்று எதையாவது உடைத்துக்கொண்டே இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.  வசதியான குடும்பத்து மார்டன் பெண்ணாக வருகிறார் நாயகி ஷில்பா மஞ்சுநாத். ரொம்ப அமைதியான ஒரு கதாப்பாத்திரம் இவருக்கு. அடிதடி, பிரச்னை என்றாலே பதறியடித்து நகரும் மென்மையாக ஒரு கேரக்டர்.  கிளைமேக்ஸ் காட்சி அழுகையிலும் சரி, ஹரிஷூடன் காதல் காட்சிகளிலும் சரி நச் நடிப்பை தந்து கவர்கிறார் ஷில்பா.

இரண்டு வேவ்வேறு குணங்களைக் கொண்ட இருவர் காதலித்தால் எப்படியிருக்கும் என்கிற ரிலேஷன்ஷிப்பை அழகாக சொல்லியிருக்கார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. பார்டியில்  இருவரும் மோதிக்கொள்ளும் இடமாகட்டும், பின் ஒவ்வொரு பிரச்னையின் போதும் சந்தித்துக் கொள்ளும் இடமாகட்டும் காட்சியில் புதுமை.

அம்மாவின் மீதிருந்த கோவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹரிஷை புரிந்து கொள்ளும் இடமாகட்டும், அவன் கோவப்படும் இடமெல்லாம் பணிந்து செல்லும்  இடமாகட்டும் முதிர்ச்சியான கேரக்டரில் கவர்கிறார் நாயகி. கூடுதலாக ரிலேஷன்ஷிப் பற்றிய நிறைய விஷயங்களை கற்றுத்தருகிறது இந்த படம்.  காதலிக்கிறோம் என்பதால் நாம சொல்லுறதை மட்டும் காதலி கேட்கணும்னு நாம சொல்லக்கூடாது. அதுமாதிரி ஒருத்தர் நம்மை காதலிக்கிறதுக்கும், விட்டுப் பிரியுறதுக்கும் அவங்களுக்கு உரிமை இருக்கு. விருப்பம் இல்லாதவங்களை தொந்தரவு பண்ணுறது உண்மையான காதல் கிடையாது. நம்ம விட்டு பிரிந்துவிட்டால்,  அவர்களை கொலை செய்ய வேண்டும் என யோசிக்கிறதும் அபத்தமான ஒன்று. அப்படி நிறைய விஷயத்தை சமூக அக்கறையோடு, கூடவே காதலையும் சேர்த்து சொல்ல முயன்றிருக்கார் இயக்குநர். அதில் பாதியளவு வெற்றியும் பெற்றிருக்கார்.  

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி படத்தில் ஒரு கேமியோவாக வருகிறார். ஹரிஷ் கல்யாணுடனான ஒரு காட்சியில் ‘இழுங்க சார்.... நல்லா இழுங்க....’அப்படின்னு வசனம் பேசுகிறார். அதனாலோ என்னவோ இரண்டாம் பாதி  அத்தனை இழுவை. முதல் பாதி போலவே இரண்டாம் பாதியிலும் நேரத்தைக் குறைத்திருக்கலாம். இரண்டாம் பாதியில் படத்துக்கு தேவையில்லாத நிறையக் காட்சிகள் வருகிறது. குறிப்பா இயக்குநரின் கேமியோவும், காதல் தோல்வி பாடலும் இல்லாமலே இருந்திருக்கலாம். 

படத்தில் பாலசரவணன், மா.கா.பா. ஆனந்த் இருவரின் காமெடிக் காட்சிகள் நன்றாகவே இருக்கிறது. மா.கா.பா. எந்த வசனம் பேசினாலும் கூடவே குமார்  போட்டு பேசுவது, பாலசரவணனின் டைமிங் சிரிக்கவைக்கிறது. அப்போ அப்போ வரும் பிக்பாஸ் ரெஃபரன்ஸ் நச். 

பின்னணி இசையிலும், ஒரு பாடலிலும் கவனிக்கவைக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். கவின் ராஜ் ஒளிப்பதிவும், பவன் ஸ்ரீ குமாரின் படத்தொகுப்பும் படத்துக்குத் தேவையானதை வழங்கியிருக்கிறது. ஆனால் கூடுதலாக கத்திரியிட்டிருந்தால் , காட்சியில் அலுப்பு தட்டாமல் தவிர்த்திருக்கலாம். 

ஹரிஷூக்கு எதாவது பிரச்னை என்றாலே நண்பர்களும், அப்பாவும் பின்னாடியே வந்து சேர்கிறார்கள். அதுமாதிரி, பொண்வண்னன் கேரக்டரை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். ஷில்பாவின் கேரக்டர் மெச்சூரிட்டியாக இருந்தாலும், குரல் அவருக்கு கைகொடுக்கவில்லை. அங்காங்கே சினிமாத்தனம் தெரிவதால், எதார்த்தமான காதல் கதையாக எடுத்துக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆனாலும் காதலில் தோல்விக்கு முக்கிய காரணம் தவறான புரிதல் தான் என்பதை சொல்லிய இடத்தில் படம் உயிர்பெறுகிறது. ரசிகர்கள் மத்தியில் கைதட்டலும் பெறுகிறது. 

நம்ம காதலிக்கிற பொண்ணு நம்ம விட்டுப் போன அவளை பழிவாங்கனும்னு நினைக்கக்கூடாது. நாம வருத்தப்படுற மாதிரி அவங்களும் வருத்தப்பட்டுட்டு தான் இருப்பாங்க. பழிவாங்கணும்னு நினைச்சாலே அங்க காதல் செத்துப் போய், ஈகோ வந்துவிடும் என அர்த்தம். காதலில்  பொறுமையும், காதலிப்பவர் மீதான நம்பிக்கையும் இருக்கவேண்டியது அவசியம். அப்படி இருந்தால் நிச்சயம் காதல் நம்மை வந்து சேரும் என்கிற விஷயத்தை உணர்வுப் பூர்வமாக கடத்துகிறது. கூடுதலாக உறவுச் சிக்கல்கள் எப்படி ஏற்படுகிறது. அதை எப்படி தவிர்க்கலாம் என்பதையும் சொல்லியிருக்கும் இடத்தில் கவரகிறது இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். 

ரேட்டிங் : 3/5

You'r reading சண்டைப்போடும் காதலர்களுக்கானப் படம்! - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் nbspவிமர்சனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக கூட்டணியில் முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது மார்க்சிஸ்ட் கட்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்