வரிசைக்கட்டி நிற்கும் சிறப்பான ஹாலிவுட் படங்கள்hellip பார்த்து ரசிக்க தயாரா இருங்க

Upcoming Hollywood movies

ஹாலிவுட் படங்களை விரும்ப காரணம், அதில் இருக்கும் பிரம்மாண்டம் தான். கற்பனை செய்யமுடியாத பல விஷயங்களை விஷூவலாக கண் முன்னாடி நிறுத்துவதும், தத்ரூபமாக ஒரு காட்சியை தருவதிலும் கில்லி என்றால் அது ஹாலிவுட் தான். உலகமெங்கும் இருக்கும் சினிமா ரசிகர்களுக்கு ஹாலிவுட் மேல் எப்போதுமே ஒரு கண் இருக்கும். ஹாலிவுட்டின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அப்படி, அடுத்தடுத்த மாதங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படங்கள், என்னென்ன வெளியாக இருக்கிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.

 

ஷசாம்: (Shazam)

டிசி காமிக்ஸின் மற்றுமொரு சூப்பர் ஹீரோ படம் தான் ஷசாம்.  சிறுவனான பில்லி, மந்திரவாதி ஒருவனைச் சந்திக்கிறான். அந்த மந்திரவாதி இவனை சூப்பர் ஹீரோவாக மாற்றிவிடுகிறான். குட்டிப் பையன் பில்லி, ஷசாம் என்று சொல்லும் போதெல்லாம் ஆறு அடி உயர சூப்பர் ஹீரோவாக மாறிவிடுகிறான். இதுதான் கதை. ஒரு சிறுவன் சூப்பர் ஹீரோவாக மாறினால் எப்படியிருக்கும் என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறது இப்படம்.  குட்டிப்பையன் சூப்பர் ஹீரோவாகி, எதிரிகளை அழிச்சு உலகத்தை காப்பாத்துறதோடு படம் முடியும். இந்தப் படத்தை ஹாரர் படங்களான லைட்ஸ் அவுட், அனபெல்; கிரியேஷன் படங்களை இயக்கிய டேவிட் செண்ட்பெர்க், இந்த முறை காமெடி படத்தை இயக்கியிருக்கிறார்.

அவெஞ்சர்ஸ் ; எண்ட் கேம் : (Avengers endgame)

நம் ஊரில் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை மாதிரி தான், ஹாலிவுட்டிலும் டிசியும், மார்வெலும் எதிரும் புதிருமானவர்கள். பேட்மேன், ஒண்டர் வுமன் என்று டிசி வெளியிட்டா, அந்தப் பக்கம் ஸ்பைடர் மேன், ஆண்ட் மேன் என மார்வெல் ஒரு கைபார்க்கும். ஆனால் இறுதியில் மார்வெல் டீம், அவெஞ்சர்ஸ் பாத்தை இறக்கிவிட்டு, ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும். இப்போதைக்கு ஹாலிவுட் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் படம் தான். தானோஸ் பாதி உலகத்தை அழித்துவிட்டான், இவ்வேளையில் பூமியை காக்க கேப்டன் மார்வெலும் வரப்போகிறார், இன்னும் என்னென்ன விஷயஙக்ள் நடக்கப்போகிறது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்.  அவெஞ்சரின் நான்காம் பாகமான அவெஞ்சர் எண்ட் கேம் ஏப்ரல் 26ல் வெளியாக இருக்கிறது.

போக்கிமான் ; டிடெக்டிவ் பிகாசு: (Pokémon detective Pikachu)

2016ல வெளியான வீடியோ கேம் போக்கிமான் ; டிடெக்டிவ் பிகாசு. ஜப்பானிய கார்டூனான போக்கிமான் தான் அந்த வீடியோ கேம். இப்போ அந்த கேமை அடிப்படையாக வைத்து ஹாலிவுட்டில் படம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.  அந்தப் படம் தான் போக்கிமான் ; டிடெக்டிவ் பிகாசு. இப்படத்தை ராப் லேட்டர்மேன் இயக்கியிருக்கிறார். லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படமாக உருவாகிவரும் இப்படத்தின் போக்கிமான் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்திருப்பது டெட்பூல் ஹீரோ ரெனால்ஸ். எப்பொழுதுமே எல்லா விஷயங்களையும் தன்னுடைய காமெடி மூலம் சொல்வதே ரெனால்ட் வழக்கம். அதே மாதிரி, இந்தப் படத்திலும் தரமான சம்பவங்கள் காத்துட்டு இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அதற்கு சாம்பிள் சமீபத்தில் வெளியான பட டிரெய்லர் தான். அனிமேஷனில் அதிரடிக்க இருக்கிற போக்கிமான் வருகிற மே 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் மொழியிலும் டப் செய்து வெளியிட இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

ஜான் விக் ; சேப்டர் 3 ( John wick 3)

பென்சிலை வைத்து ஒருவரை கொலை செய்ய முடியுமா? முடியும்...ஒரு பென்சிலை வைத்து மூன்று பேரை கொலை செய்து மிரட்டும் ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ தான் ஜான்விக். முதல் பாகமும், சரி, 2017ல் வெளியான இரண்டாம் பாகமும் சரி மிரட்டல் ரகம். ஜான்விக் கேரக்டரில்  Keanu Reeves நடித்டிருப்பார். இதுவரை இரண்டு பாகங்கள் தான் வெளியாகியிருக்கிறது. ஆனால் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு எப்படியான எதிர்பார்ப்பும், ஓபனிங்கும் இருக்குமோ அந்த வரவேற்பு இப்படத்துக்கும் இருக்கிறது. பழிவாங்கும் கதை தான் என்றாலும், ஜான் விக் முடிவு செய்துவிட்டால் எப்படியென்றாலும் பழிவாங்குவான். ஆனால் அவன் சண்டைப்போடும் காட்சியும், பழிவாங்கும் விதமும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று தான் சொல்லவேண்டும். இப்பொழுது ஜான்விக் ; சேப்டர் 3யும் தயாராகிவிட்டது. இப்படம் மே 17ல் வெளியாக இருக்கிறது. வெறியோடு வெயிட் பண்ணுங்க காய்ஸ்.

அலாதீன்: (Aladdin)

1992ல் வெளியாகி ஹிட்டான  அலாதின் படத்தை, திரும்பவும் ரிமேக் செய்து வெளியிடுகிறது டிஸ்னி நிறுவனம். அலாதீன் கதை நாம் எல்லோருக்குமே தெரியும். தமிழ்ல கூட கமல் நடித்து, அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் வெளியானது. இப்பொழுது லேட்டஸ்ட் வெர்ஷன் அலாதீன் படம் தயாராகிவருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காரணம், படத்தில் நீல நிற பூதமாக நடித்திருப்பது வில்ஸ்மித் என்பதால் தான். தவிர,  அலாவுதின் வேடத்தில் 'மேன மசௌத்' நடித்துள்ளார். அலாதீன் படம் மே 24ல வெளியாக இருக்கிறது.

டாய் ஸ்டோரி 4 (Toy story 4)

சிறுவயதில் விதவிதமான பொம்மைகளை வைத்து விளையாடியிருப்போம். அந்த பொம்மைகளுக்கு உயிர் வந்தால் எப்படியிருக்கும், அந்த பொம்மைகள் செய்யும் அட்டகாசமும், சாகசமும் தான் டாய் ஸ்டோரி. 1995ல் அனிமேஷன் திரைப்படமாக வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது டாய் ஸ்டோரி. டிஸ்னி மற்றும் பிக்ஸர் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், ஹாலிவுட்டில் வெளியான முழுநீள முதல் அனிமெஷன் திரைப்படம் டாய் ஸ்டோரி தான். அதன் பிறகு தான் பல அனிமேஷன் படங்கள் வரத்தொடங்கியது. 1999ல் இரண்டாம் பாக, 2010ல் மூன்றாம் பாகங்கள் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டாய் ஸ்டோரி 4 தற்பொழுது தயாராகிவருகிறது. படம் ஜூன் 21ல் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைடர் மேன் : (Spider man)

ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு  உண்டு. சிலந்தி மனிதனின் சாகசங்கள் திரைப்படங்களாகவும், கார்டூனாகவும், அனிமேஷனாகவும், காமிக்ஸாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்பைடர் மேன் சீரிஸிலிருந்து ஸ்பைர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படம் வெளியாக தயாராகிவருகிறது. கடந்த 2017ல் வெளியான ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங் படத்தின் இரண்டாவது சீக்குவல் தான் தற்பொழுது தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.  பீட்டர் பார்க்கர் கேரக்டரில் டாம் ஹாலந்த் நடித்துள்ளார். ஜூலை 5ஆம் தேதி சிலந்தி வலையை விரிக்கவிருக்கிறது. ஸ்பைடர் மேன் லவ்வர்ஸ் கெட் ரெடி...!

 

தி லயன் கிங்  (The lion king)

ஜூலை 19ஆம் தேதி வெளியாக இருக்கும் அனிமேஷன் திரைப்படம் தான் தி லயன் கிங். 1994ல் டிஸ்னி தயாரிப்பில் வெளியான கார்டூன் திரைப்படம் தி லயன் கிங். இந்தப் படத்தை லைவ் ஆக்‌ஷன் அனிமேஷனாக தற்பொழுது ரீமேக் செய்து வெளியிடுகிறது டிஸ்னி நிறுவனம். காட்டில் இருக்கும் மிருகங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கற்பனையோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு ஏகபோக வரவேற்பு. குறிப்பாக, இந்தப் படத்தில் வந்த டிமோன் அண்ட் கும்பா கேரக்டர் தான் பின்னாளில் பிரபலமானது. 1994ல வெளியான தி லயன் கிங் படத்தில் அந்தக் காட்டுப்பூனையும், காட்டுப்பன்றியும் செய்த அட்டகாசமே படத்தின் ஹைலைட்டும் கூட. தவிர, இந்தப் படத்தின் இசைக்காக, ஹன்ஸ் சிம்மர்க்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அதே படத்தை லைவ் ஆக்‌ஷன் அனிமேஷனாக பார்க்க ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இப்படத்தை ‘ஜங்கிள் புக்' இயக்குநர் ஜான் ஃபேவ்ரோ இயக்கியிருக்கார். காட்டுக்குள் ஜாலியாக ஒரு ட்ரிப் அடிக்க, ஜூலை 19 வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!

You'r reading வரிசைக்கட்டி நிற்கும் சிறப்பான ஹாலிவுட் படங்கள்hellip பார்த்து ரசிக்க தயாரா இருங்க Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமாகாவுக்கு ஆட்டோ சின்னம் - சுயேட்சைகள் பலருக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கீடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்