டைரக்டர் விசு மறைவுக்கு ரஜினி, சரத் இரங்கல்..

Rajinikanth, Sarathkumar condoles for Visu Demise

சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை குடும்பப்பாங்காக இயக்கி அளித்ததுடன் குணசித்ரமான நடிப்பில் ஜொலித்தவர் விசு. உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து டுவிட்டர் மெசெஜ் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என கலையுலகில் பன்முகத் தன்மையுடன் சிறந்து விளங்கியவரான விசு மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.சமுதாய கருத்துகளை நகைச் சுவையாக, நாகரீகமாக எடுத்துச் சொல்வதில் ஆற்றல் மிக்கவர் விசு. தனது திரைப்படங்களின் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் பாச சிக்கல்களை நகைச்சுவை உணர்வோடும், எதார்த்தமாகவும், அழுத்தமாகவும் எடுத்துக் கூறியவர்.
சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், நாணயம் இல்லாத நாணயம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி என திரைப்படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு அளிப்பதில் வல்லவர்.
அவரது இழப்பு நாடகம், திரைத்துறை, சின்னத்திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.
மேலும் பல்வேறு நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading டைரக்டர் விசு மறைவுக்கு ரஜினி, சரத் இரங்கல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுதார்.. ஏன் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்