தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்.. வைரஸை விளாசும் வைரமுத்து..

Corona Poem: “Thoonilum Thurumbilum” written by Kaviperarasu Vauramuthu

கவிப்பேரரசு வைரமுத்து கொரோனா வைரசைப் பற்றி எழுதியிருக்கும் கவிதை வைரஸுக்கு மட்டுமல்ல யாருக்கும் கட்டுப்படாமல் கட்டவிழ்ந்து திரிந்த மனிதர்களுக்கும் சாட்டையடி கொடுக்கிறது.

இதோ அந்த கவிதை:

ஞாலமளந்த ஞானிகளும்
​சொல் பழுத்த கவிகளும்
​சொல்லிக் கேட்கவில்லை நீங்கள்
கொரோனா சொன்னதும்
​குத்தவைத்துக் கேட்கிறீர்கள்.

​உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்
​இந்தத் தொண்டைக்குழி நண்டுக்கு
​நுரையீரல்தான் நொறுக்குத் தீனி

அகிலத்தை வியாபித்திருக்கும் இந்தத்
​தட்டுக்கெட்ட கிருமியின்
​ஒட்டுமொத்த எடையே
​ஒன்றரை கிராம்தான்
​இந்த ஒன்றரை கிராம்
​உச்சந்தலையில் வந்து உட்கார்ந்ததில்​
​உலக உருண்டையே தட்டையாகிவிட்டது!
​சாலைகள் போயின வெறிச்சோடி
​போக்குவரத்து நெரிசல்
​மூச்சுக் குழாய்களில்.

​தூணிலுமிருப்பது
​துரும்பிலுமிருப்பது
​கடவுளா? கரோனாவா?
​இந்த சர்வதேச சர்வாதிகாரியை
​வைவதா? வாழ்த்துவதா?
​தார்ச்சாலையில் கொட்டிக் கிடந்த
​நெல்லிக்காய் மனிதர்கள் இன்று
​நேர்கோட்டு வரிசையில்
​சட்டத்துக்குள் அடங்காத ஜனத்தொகை
​இன்று வட்டத்துக்குள்
உண்ட பிறகும் கைகழுவாத பலர் இன்று
​உண்ணு முன்னே
புகைக்குள் புதைக்கப்பட்ட இமயமலை
இன்றுதான்
முகக்கவசம் களைந்து முகம் காட்டுகிறது
​மாதமெல்லாம் சூதகமான
கங்கை மங்கை
அழுக்குத் தீரக் குளித்து
அலைக் கூந்தல் உலர்த்தி
​நுரைப்பூக்கள் சூடிக்
​கண்சிமிட்டுகின்றாள்​
​கண்ணாடி ஆடைகட்டி.
​குஜராத்திக் கிழவனின்
அகிம்சைக்கு மூடாத மதுக்கதவு
கொரோனாவின் வன்முறைக்கு மூடிவிட்டதே!
ஆனாலும்
அடித்தட்டு மக்களின்
அடிவயிற்றிலடிப்பதால்
இது முதலாளித்துவக் கிருமி.
மலையின்
தலையிலெரிந்த நெருப்பைத்
திரியில் அமர்த்திய
திறமுடையோன் மாந்தன்
இதையும் நேர்மறை செய்வான்.
நோயென்பது
பயிலாத ஒன்றைப்
பயிற்றும் கலை.
குருதிகொட்டும் போர்
குடல் உண்ணும் பசி
நொய்யச் செய்யும் நோய்
உய்யச் செய்யும் மரணம்
என்ற நான்கும்தான்
காலத்தை முன்னெடுத்தோடும்
சரித்திரச் சக்கரங்கள்
பிடிபடாதென்று தெரிந்தும்
யுகம் யுகமாய்
இரவைப் பகல் துரத்துகிறது
பகலை இரவு துரத்துகிறது
ஆனால்
விஞ்ஞானத் துரத்தல்
வெற்றி தொடாமல் விடாது
மனித மூளையின்
திறக்காத பக்கத்திலிருந்து
கொரோனாவைக் கொல்லும் அமுதம்
கொட்டப் போகிறது
கொரோனா மறைந்துபோகும்
பூமிக்கு வந்துபோனதொரு சம்பவமாகும்
ஆனால்,
அது
கன்னமறைந்து சொன்ன
கற்பிதங்கள் மறவாது
இயற்கை சொடுக்கிய
எச்சரிக்கை மறவாது
ஏ சர்வதேச சமூகமே!
ஆண்டுக்கு ஒருதிங்கள்
ஊரடங்கு அனுசரி
கதவடைப்பைக் கட்டாயமாக்கு
துவைத்துக் காயட்டும் ஆகாயம்
கழியட்டும் காற்றின் கருங்கறை
குளித்து முடிக்கட்டும் மானுடம்
முதுகழுக்கு மட்டுமல்ல
மூளையழுக்குத் தீரவும்.

இவ்வாறு கவிதையில் கூறி உள்ளார்.

You'r reading தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்.. வைரஸை விளாசும் வைரமுத்து.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் 6535 பேருக்கு கொரோனா.. பலி 45 ஆக அதிகரிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்