கிராமங்களில் விவசாயத்தில் முதலீடு செய்யும் ஹீரோக்கள்.. ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி குவிக்கின்றனர்..

Heroes investing in agriculture in villages

கெட்டபின் பட்டணம் சேர் என்பார்கள் இப்போது பட்டணமே கெட்டு வருகிறது. இனி எங்குச் சென்று சேர்வது என்று மக்களிடையே திகைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் பட்டணப் பிரவேசம் என்ற படம் வந்தது. 1977ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தர் இயக்கி இருந்தார். டெல்லி கணேஷ், ஜெய்கணேஷ், சிவ சந்திரன், சரத்பாபு, காத்தாடி ராமமூர்த்தி, போன்றவர்கள் நடித்திருந்தனர். கிராமத்தில் வாழ வழியில்லை சிட்டிக்குச் சென்றால் வசதியாக வாழலாம் என்று எண்ணி குடும்பமே புறப்பட்டு மதராஸ் (சென்னை) வருகிறது. உயரமான கட்டிடங்கள், போக்குவரத்து வசதி, நாகரீகமான வாழ்க்கை என எல்லாமே புதுசாக தெரிகிறது. ஆனால் அந்த குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை வந்து சேர்கிறது. அதில் ஏற்படும் இழப்பை அந்த குடும்பத்தால் தாங்க முடியாமல் கிராமமே மேல் என்று கிராமத்தை நோக்கிச் செல்கிறது. இப்படி அந்த கதை அமைக்கப்பட்டிருந்தது.

அந்த காலத்திலேயே அப்படி என்றால் இன்றைக்கு நகரம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறதோ அந்தளவுக்குக் கெட்டுச் சீரழிந்திருக்கிறது. யாரைப் பார்த்தாலும் அவசரமாகப் பறக்கிறார்கள். காசுக்காகக் கூலிப்படைகள் கொலை, கொள்ளை என்று செயல்படுகின்றன. பெரும்பாலான போலீஸார் உதவும் நோக்குடனும், மக்கள் சேவை நோக்குடனும் இருந்தாலும் சில அதிகாரிகள் அதிகார அத்துமீறல், அப்பாவி மக்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்வது. அதற்குப் பல உதாரணங்கள் இருந்தாலும் சமீபத்திய சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பினீக்ஸ் போலீஸாரால் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மக்களை உலுக்கியிருப்பதுடன் போலீஸ் விசாரணை, சிபிசிஐ விசாரணை தாண்டி தற்போது சிபிஐ விசாரணைக்குச் சென்றிருக்கிறது.
ஐ நா மன்றம் சாத்தான்குளம் கொலை வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் குரல் கொடுத்திருக்கிறது. அப்படியென்றால் எந்தளவுக்கு மனித அத்துமீறல் நடந்திருக்கிறது என்பது கண்கூடு. இதெல்லாம் இந்தக்கால சிட்டியின் கொடுமையாக விரிந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கில் நகரத்திலிருந்து காலி செய்துவிட்டுப் பல குடும்பம் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் மதிப்பை இன்றைய இளைஞர்கள் உணரத் தொடங்கி இருக்கின்றனர். அது பற்றி நிறையத் திரைப்படங்களும் வரத் தொடங்கி உள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் விவசாயம், விவசாயிகள், கிராமத்தைப் பற்றிய மிக முக்கிய படமாகும். அடுத்து ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் கிராமத்தைப் பற்றிப் பேசத் தயாராக உள்ளது. வெளிநாட்டில் கார்ப்பரேட் கம்பெனியில் உயர் பதவியில் இருக்கும் ஹீரோ அதைத் தூக்கிப் போட்டுவிட்டு தனது கிராமத்துக்கு வந்து விவசாயம், விவசாயிகள் பிரச்சனைக்காகப் போராடும் கதையாக உருவாகி இருக்கிறது.இப்படத்தை லக்‌ஷ்மன் இயக்கி உள்ளார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அப்படம் திரைக்கு வரக் காத்திருக்கிறது.

நகரத்துக்கு இனிமேல் தான் பேராப்பத்துக்கள் காத்திருக்கின்றன. நகரத்துக்கு அருகிலேயே அணுமின் நிலையங்கள், அதிலிருந்து வெளியாகும் அணுக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன அல்லது புதைக்கப்படுகின்றன. ஒரு கடல் பூகம்பம், கடல் கொந்தளிப்பு அல்லது சுனாமி வந்தால் சிட்டியில் பாதி காணாமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். எங்கே கிராமத்து மகத்துவத்தை மக்கள் உணர்ந்துவிடுவார்களோ என்று எண்ணும் சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்றே கிராமங்களை வளைத்துப்போட்டு அழித்து பெரிய சாலைகள் அமைக்கத் திட்டங்களை அரசு மூலம் நிறைவேற்றும் தந்திரத்தையும், ஆயில் எடுக்கும் ஆலைகள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் எனப் பசுமையான கிராமங்களைக் குறி வைத்துச் செயல்படுகின்றன. இதில் வெளிநாட்டுச் சதியும் சில அரசியல்வாதிகளின் கைங்கரியமும் இருக்கிறது என்பதை மறைக்க முடியாது. இன்னும் எவ்வளவு வழிகளில் இதுபோன்ற சதி வலைகள் விரிக்கப்படும் என்பது யூகிக்க முடியாத நிலையாக உள்ளது.
மேற்சொன்ன நகரத்து ஆபத்துக்களை உணர்த்தவோ எண்ணவோ பல நடிகர்கள் புறநகர் மற்றும் கிராமங்களின் பக்கம் கவனத்தைத் திருப்பி இருப்பதுடன் விவசாயம் சார்ந்த பண்ணை வீடுகள் வாங்கி இருப்பதுடன் அதில் சத்தமில்லாமல் விவசாயத்தையும் செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் பகுதியில் பண்ணை வீடு வைத்திருக்கிறார், அங்கு அவர் விவசாய வேலை செய்யாவிட்டாலும் அமைதியான சூழலில் இருக்க விரும்பினால் அங்குச் சென்று தங்கிவிடுகிறார். ஒரு பக்கம் வீடு இருந்தாலும் மறுபக்கம் தொழிலாளர்கள் உழவு, பண்ணை வேலைகள் செய்கின்றனர்.நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பண்ணை வீட்டில் அவரே பண்ணை வேலைகளில் களம் இறங்கிவிடுகிறார், டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்கிறார். தனது மகனுக்கும் விவசாயம் பற்றிச் சொல்லித் தருகிறார். நடிகர் பார்த்திபன் காஞ்சிபுரம் பகுதியில் பண்ணை விவசாயம் செய்கிறார். அதுவும் இவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். நடிகர் சமுத்திரக்கனி ராஜபாளையம் பகுதியிலுள்ள செய்துரில் ஏக்கர் கணக்கில் நிலத்தில் பம்ப் செட் வைத்து விவசாயம் பார்த்துப் பயிர் செய்கிறார். அருண்பாண்டியன் உள்ளிட்ட இன்னும் பல ஹீரோக்கள் விவசாயத்தையும் ஒரு பக்கம் செய்து வருகின்றனர். கோலிவுட் ஹீரோக்கள் தாம் இப்படி என்று பார்த்தால் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கிராமப் புறத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி வைத்துப் பயிர்செய்து பராமரித்து வருகிறார்.

இந்த கொரோனா ஊரடங்கில் சல்மான்கானே வயலுக்குச் சென்று பயிர் விளைச்சல், அறுவடை விஷயங்களில் கவனம் செய்து வருகிறார். சீனியர் நடிகர் தர்மேந்திராவும் தனது வயலில் இயற்கை விவசாயம் செய்கிறார். எதிர்காலம் கிராமத்திலும் விவசாயிகளிடம் தான் உள்ளது என்பதற்கான அறிகுறிகள் தான் இவை என்றால் அது மிகையல்ல.

You'r reading கிராமங்களில் விவசாயத்தில் முதலீடு செய்யும் ஹீரோக்கள்.. ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி குவிக்கின்றனர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல நடிகையின் முகத்தை மூடிய பட்டர்ஃப்ளை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்