ஆபாச யூடியூபரை தாக்கிய சம்பவம் பெண் டப்பிங் கலைஞர் தலைமறைவு...!

Kerala police search for dubbing artist bhagyalakshmi after court rejects anticipatory bail

திருவனந்தபுரத்தில் பெண்கள் குறித்து யூடியூபில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டவரைத் தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வரும் மலையாள சினிமா பெண் டப்பிங் கலைஞர் உட்பட 3 பெண்களும் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் வெள்ளாயணி என்ற இடத்தை சேர்ந்த விஜய் நாயர் என்பவர் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது சேனலில் பெண்ணியவாதிகள் குறித்தும், பெண்கள் குறித்தும் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குக் கேரளாவில் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல மலையாள சினிமா டப்பிங் கலைஞரான பாக்கியலட்சுமி என்பவர் தலைமையில் 3 பெண்கள் விஜய் நாயர் தங்கியிருந்த அறைக்குச் சென்று அவரை தாக்கினர்.இதுகுறித்து விஜய் நாயர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாக்கியலட்சுமி உட்பட 3 பெண்கள் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த பிரிவின் படி இவர்களுக்கு 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இதையடுத்து அவர்கள் முன்ஜாமீன் கோரி திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.

பாக்கியலட்சுமி உட்பட 3 பேரின் இந்த செயலை அங்கீகரிக்க முடியாது என்றும், அவர்களுக்கு முன் ஜாமீன் அளித்தால் சமூகத்திற்கு அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் நீதிபதி கூறினார்.முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி உள்பட 3 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். நேற்று போலீசார் அவர்களைக் கைது செய்வதற்காக 3 பேரின் வீடுகளுக்கும் சென்றனர். ஆனால் அவர்கள் வீடுகளில் இல்லை. 3 பேரும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

You'r reading ஆபாச யூடியூபரை தாக்கிய சம்பவம் பெண் டப்பிங் கலைஞர் தலைமறைவு...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலகம் முழுவதும் நிர்வாணமாக சுற்றும் தம்பதியின் அடுத்த திட்டம் என்ன தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்