ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன் பேட்டி..

தமிழக அரசின் ஐ ஏ எஸ் அதிகாரி பொறுப்பிலிருந்து சந்தோஷ் பாபு ராஜினாமா செய்துவிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று இணைந்தார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:அனைவருக்கும்‌ வணக்கம்‌.தமிழக அரசின்‌ பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூத்த ஐஏஎஸ்‌ அதிகாரி சந்தோஷ்‌ பாபு. தன்னுடைய அபாரமான நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன்‌ மற்றும்‌ சமூக அக்கறைக்காக அனைத்து தரப்பினராலும்‌ பாராட்டப்பட்டவர்‌. இன்னும்‌ எட்டாண்டுகள்‌ அரசுப்‌ பணி இருந்த போதும்‌, மக்கள்‌ சேவை செய்ய வேண்டும்‌ எனும்‌ உயரிய நோக்கில்‌ தான்‌ வகித்த உயர்‌ பதவியை உதறி, விருப்ப ஓய்வு பெற்றார்‌.

வாழ்நாள்‌ முழுக்க சமரசமற்ற நேர்மையோடும்‌ துணிச்சலோடும்‌ ஊழலுக்கு எதிராகப்‌ போராடி வந்த சந்தோஷ்‌ பாபு அவர்கள்‌ தமிழகத்தைச்‌ சீரமைக்கும்‌ அரும்பணியில்‌ நம்மோடு இணைந்திருக்கிறார்‌ என்பதைப்‌ பெருமகிழ்ச்சியுடன்‌ உங்களுக்கு அறிவிக்கிறேன்‌.மிகச்சரியான முடிவினை எடுத்தமைக்கு சந்தோஷ்‌ பாபுவை மனதாரப்‌ பாராட்டுகிறேன்‌. சந்தோஷ்‌பாபுவினைப்‌ போன்ற நேர்மையாளரின்‌ வருகை நமது கட்சிக்கு நிச்சயம்‌ பலம்‌ சேர்க்கும்‌ என்பதில்‌ ஐயமில்லை. அவரை பொதுச்‌ செயலாளர்‌ -தலைமை அலுவலகம்‌ நியமித்துள்ளோம்‌ என்பதையும்‌ மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. தான்‌ செய்த பணிகள்‌ அனைத்திலும்‌ முத்திரை பதித்தவர்‌, இதிலும்‌ தடம்‌ பதிப்பார்‌ என்பதில்‌ ஐயம்‌ இல்லை.எப்போதும் போல அனைத்து உறுப்பினர்களும்‌ நமது புதிய பொதுச்‌ செயலாளர்‌ - தலைமை அலுவலகம்‌ அவர்களுக்குச்
சிறப்பான ஒத்துழைப்பினையும்‌ ஆதரவினையும்‌ அளித்திட வேண்டுகிறேன்‌.
நாளை நமதே. இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் என் தொழிலை விட அரசியலில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ரஜினியிடம் தேர்தலில் ஆதரவு கேட்பீர்களா என்கிறார்கள். ரஜினி என்னுடைய நண்பர் அரசியலை விட அவரது ஆரோக்கியத்தில் எனக்கு அக்கறை அதிகம். தேர்தலில் எல்லோரிடமும் நான் ஆதரவு கேட்பேன் என்னுடைய நண்பர் ரஜினி, அவரிடம் ஆதரவு கேட்காமல் இருப்பேனா? சினிமாவில் நாங்கள் போட்டியாளர்களாகத் தான் இருந்தோம் பொறுமையாளர்களாக இல்லை” என்றார்.

ரஜினிகாந்த நேற்று ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களைச் சந்தித்தார். பிறகு ரஜினி பேட்டியில் கூறும்போது,அரசியலில் என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் தெரிவிப்பேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கட்சி தொடங்குவது பற்றி ரஜினி பதில் எதுவும் சொல்லவில்லை.

You'r reading ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தயாரிப்பாளர் சங்க தேர்தல் பற்றி பாரதிராஜா கருத்து.. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நாளை விழா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்