கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின் இன்று தியேட்டர்கள் திறப்பு மாஸ்டர் படம் ரிலீஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்

கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று பெரும்பாலான சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. முதல் படமாக விஜய்யின் மாஸ்டர் ரிலீசானது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு கிடந்த சினிமா தியேட்டர்களை கடந்த 5ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி திறக்க கேரள அரசு அனுமதி அளித்தது. ஆனால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் அரசு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே தியேட்டர்களை திறக்க முடியும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர். இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் கேரள பிலிம் சேம்பர் நிர்வாகிகளுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்திலும் தியேட்டர் உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் பினராயி விஜயன் தியேட்டர் அதிபர்களுக்கு பல அதிரடி சலுகைகளை அறிவித்தார். 3 மாதங்களுக்கு கேளிக்கை வரி ரத்து, சொத்து வரியில் சலுகை, மின் கட்டணத்தில் சலுகை என பல சலுகைகளை வழங்கினார். இதையடுத்து 13ம் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதன்படி கேரளா முழுவதும் இன்று பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்பட்டன. கேரளாவில் மொத்தம் 720 தியேட்டர்கள் உள்ளன. இதில் பெரும்பாலான தியேட்டர்களில் இன்னும் பராமரிப்பு பணிகள் முடிவடையவில்லை. இதனால் இன்று சுமார் 350 தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

இதில் பெரும்பாலான தியேட்டர்களில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி தற்போதைக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதனால் இன்று காலை 9 மணிக்கு அனைத்து தியேட்டர்களிலும் விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீசானது. அடுத்த வாரம் முதல் படிப்படியாக மலையாள படங்கள் ரிலீசாகும் என கருதப்படுகிறது. முதல் படமே விஜய்யின் மாஸ்டர் படம் வெளியானதால் கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் திரண்டனர். தமிழ்நாட்டைப் போலவே நேற்று முதலே பெரும்பாலான தியேட்டர்களில் இந்தப் படத்திற்கு முன்பதிவு முடிந்துவிட்டது.

You'r reading கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின் இன்று தியேட்டர்கள் திறப்பு மாஸ்டர் படம் ரிலீஸ் ரசிகர்கள் கொண்டாட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா தொற்றிலிருந்து மீண்ட மற்றொரு நடிகர்.. ஷூட்டிங்கிற்கு ரெடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்