இறந்த நடிகர் போதை மருந்து விவகாரத்தில் உதவி இயக்குனர் கைது.. மீண்டும் வேகம் எடுக்கும் சுஷாந்த் வழக்கு..

சமூகத்தில் நடக்கும் அவலங்களை திரைப்படமாக்குகிறார்கள். பலாத்காரம், கந்துவட்டி, அரசியல் சூழ்ச்சி எனப் பல கதைக்கருவுடன் படங்கள் உருவாகிய நிலை மாறி சமீப காலமாகப் போதை மருந்து கலாச்சாரம் பற்றிய கதைகள் அதிகரித்து வருகிறது. ஹாலிவுட் முதல் பாலிவுட், கோலிவுட்வரை இதுபோன்ற கதைகள்தான் பிரதானமாகப் படமாகிறது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை விவகார பின்னணியில் பல்வேறு மர்மங்கள் புதைந்திருக்கிறது. அதில் போதை மருந்து விவகாரமும் ஒன்று.

சுஷாந்த்துக்கு அவரது காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கொடுத்து சுஷாந்த்தை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரியா கைதாகி சிறையில் மாதக் கணக்கில் அடைபட்டுக்கிடந்தார். பின்னர் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இதற்கிடையில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் போன்ற நடிகைகளிடம் போதை மருந்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் இவர்கள் யாரும் கைதாகவில்லை. விசாரணைக்குப் பிறகு, எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்கள்.

ஆனால் சுஷாந்த் வழக்கில் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் இன்னமும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.சுஷாந்த் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மே மாதம் அவருக்கு உதவி இயக்குனர் ரிஷிகேஷ் பவார் போதைப் பொருள் வழங்கியதாகக் கூறப்பட்டது. ஜூன் மாதம் சுஷாந்த் அவரது இல்லத்தில் இறந்து கிடந்தார். இதன்பிறகு ரிஷிகேச்ஜ் பவார் தலைமறைவாகிவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக என்.சி.பி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியபோது, ​அந்த வழக்கில் முன்கூட்டியே ஜாமீன் கோருவதற்காக ரிஷிகேஷ் பவார் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.

ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை நிராகரித்தது.வீட்டில் நடந்த சோதனையின் போது, ​போலீசார் ஒரு மடிக் கணினியைக் கண்டு பிடித்தனர், இது சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதைப் பொருள் வழங்குவதில் ரிஷிகேஷ் பவாரின் பங்கை நிரூபிக்க முக்கியமான ஆதாரமாக இருப்பதாக நம்பப்படுகிறது.தற்போது போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரணை தொடங்கி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரிஷிகேஷிடம் நடக்கும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading இறந்த நடிகர் போதை மருந்து விவகாரத்தில் உதவி இயக்குனர் கைது.. மீண்டும் வேகம் எடுக்கும் சுஷாந்த் வழக்கு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீ வேலை பார்க்க முடியாது பாடகருக்கு நடிகை மிரட்டல்.. நீ கடவுள் இல்லை என பதிலடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்