சீதக்காதி விமர்சனம்: 2.0வை தொடர்ந்து இன்னொரு பேய் படமா?

seethakaathi movie review

விஜய்சேதுபதியின் சீதக்காதி படம் வரும் வியாழனன்று வெளியாகிறது. ஆனால், நேற்று இரவு பத்திரிகையாளர்கள் பார்க்க தனிக் காட்சி வெளியானது. இக்கட்டுரையில் வரும் விமர்சனத்தில் ஸ்பாய்லர் உண்டு, கதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைப்பவர்கள் தொடர வேண்டாம்.

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற கதை நாம் சிறு வயதில் அறிந்த ஒன்று தான். இந்த படத்திலும் அய்யா ஆதிமூலமாக வரும் விஜய்சேதுபதி, செத்தும் தனது நடிப்பு ஆன்மாவை இன்னொரு நடிகனுக்கு கொடுத்து அவனை எப்படி பெரிய நடிகன் ஆக்குகிறார் என்பதும் அது ஏன்? என்பதும் தான் படத்தின் கதை.

சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் 2.0 படத்திலும் அக்‌ஷய் குமார் இறந்த பின்னர், அவரது ஆரா எனப்படும் நெகட்டிவ் எனர்ஜி பழி வாங்குவதாக ஷங்கர் எடுத்திருந்தார். இந்த படத்திலும் அதே போல தான் ஆனால், இதில் அறிவியலை போட்டு இயக்குநர் பாலாஜி தரணிதரன் குழப்பவில்லை.

இப்படியொரு கதையை யோசித்ததற்கே அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். ஆனால், ஆமை வேகத்தில் நகரும் இக்கதையும், வெறும் அரை மணி நேரமே வரும் விஜய்சேதுபதியும் நிச்சயம் விஜய்சேதுபதியின் 25வது படம் என எண்ணி செல்வோருக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.

ஆனால், நீங்கள் ஒரு சினிமா ரசனைக்காரர், படம் மெதுவாக நடந்தாலும், கற்பனை மிகுந்திருந்தாலும், புதிய முயற்சியை பார்ப்பேன் என்றால் நிச்சயம் உங்களை சீதக்காதி மகிழ்விப்பான்.

இளம் பருவத்தில் இருந்தே நாடகத்தின் மீது பற்றுக் கொண்ட நாடக நடிகர் அய்யா ஆதிமூலம், சினிமா வாய்ப்புகள் வந்தும் நாடகத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக அதில் நடிக்கவில்லை.

அவுரங்கசிப் மேடை நாடகத்திற்காக ஒரு காட்சியில் 10 நிமிடங்கள் எந்தவொரு கட்டும் இல்லாமல் விஜய்சேதுபதி புரஸ்தெடிக் மேக்கப்புடன் நடித்திருப்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு நடிப்பு பள்ளிகளில் பாடமாக கூட இந்த காட்சி இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதன் பின்னர் அவரது ஆன்மா ராஜ்குமார் உடலுக்கு தாவுகிறது. இதனை உணரும் மெளலி, ராஜ்குமாரை சினிமாவில் நடிக்க வைக்கிறார். அவரும் பல படங்களில் நடித்து மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக ஆகிறார். அந்த காட்சியெல்லாம் படத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் நகைச்சுவை காட்சிகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு உள்ளது.

அடுத்ததாக அவர் வில்லன் சுனிலின் உடலில் ஏறுகிறார். இதெல்லாம் அய்யா ஆதிமூலம் ஏன் செய்கிறார் என்பதை தியேட்டரில் போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் இடம்பெறும் நாடக காட்சிகள் ரியல் நாடகமாகவே நகர்வதால், தியேட்டரில் இக்கால ரசிகனுக்கு அது போர் அடிக்கும் ஒன்றாகவே அமைகிறது. விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம். கட்ஸ் ஸ்பீடாக இருந்திருக்கலாம் என்று விமர்சிப்போருக்கு அப்படி செய்தால், படத்தின் அஸ்திவாரம் வலுவிழந்து போய்விடும்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியின் ஆஸ்த்தான நாயகிகளான ரம்யா நம்பீசன் மற்றும் காயத்ரி வெகு சில நிமிடங்களே வருகின்றனர். படம் மூன்று கட்டங்களாக நகர்கிறது. அரசுக்கெதிராக விஜய்சேதுபதி கோர்ட்டில் பேசும் வசனம் தற்போதைய அரசியல்வாதிகளுக்கு சொல்லும் மறைமுக பாடமாகவே உள்ளது.

சில காட்சிகள் தொய்வை கொடுத்தாலும், சில காட்சிகள் சிரிப்பலையை எழுப்புகிறது. சில காட்சிகள் பிரம்மிப்பூட்டுகிறது. சில காட்சிகள் அழ வைக்கிறது. மொத்தத்தில் சீதக்காதி தமிழ் திரையுலகில் ஒரு தனி ஓவியம் தான்.

படத்தின் வெளியீட்டிற்கு பிறகு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்தே படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவது உறுதியாகும். மேலும், பல முனை போட்டிகளுடன் சீதக்காதி வெளியாவது படத்திற்கு நிச்சயம் பல சிக்கல்களை கொடுக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

You'r reading சீதக்காதி விமர்சனம்: 2.0வை தொடர்ந்து இன்னொரு பேய் படமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அது என்னடா ‘பொம்பள தல’ சாய் பல்லவிக்கு மீம்ஸ் ரெடி பண்ணும் அஜித் ரசிகர்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்