7வது விக்கெட்டில் சாதனை படைத்த வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் சரிவிலிருந்து மீளும் இந்தியா

முதல் இன்னிங்சில் அனைத்து முக்கிய வீரர்களும் ஆட்டமிழந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியாவை பந்து வீச்சாளர்களும், புதுமுக வீரர்களுமான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தனர். சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடியும் என்று இந்திய ரசிகர்கள் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பாக இந்தியா தோல்வியடையும் என்று தான் அனைவரும் கருதினர். ஆனால் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், அஷ்வின் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சிட்னி டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அதேபோல தான் தற்போதைய பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

பெரும்பாலான வீரர்கள் காயம் அடைந்த நிலையில் அறிமுக வீரர்களாக களமிறங்கி முதல் போட்டியில் விளையாடிய தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலம் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தனர். இந்திய அணியில் முன்னணி பந்துவீச்சாளர்களான பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகிய 5 பேரும் இல்லாத நிலையில் புதுமுக இளம் பந்துவீச்சாளர்களான நவ்தீப் செய்னி, நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் கொண்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும், நடராஜனும் தலா 3 விக்கெட்டுகளையும், தன்னுடைய 2வது போட்டியில் களமிறங்கிய ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் பின்னர் ஆடத் தொடங்கிய இந்தியா நேற்று ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இன்று கேப்டன் ரகானே, புஜாரா, மாயங்க் அகர்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய நான்கு முன்னணி வீரர்களும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் 7வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும் இணைந்தனர். இருவருமே புதுமுகங்கள் என்பதால் இந்தியா 250 ரன்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று அனைவரும் கருதினர்.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இருவரும் மிகச் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். இந்நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷார்துல் தாகூர் 67 ரன்களில் பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்த அற்புத ஜோடி பிரிந்தது. வாஷிங்டன் சுந்தரும், தாக்கூரும் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்கு இது ஒரு சாதனையாகும். 104 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவை விட 54 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. 8வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தருடன் நவ்தீப் செய்னி ஜோடி சேர்ந்துள்ளார்.

You'r reading 7வது விக்கெட்டில் சாதனை படைத்த வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் சரிவிலிருந்து மீளும் இந்தியா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்த புதுச்சேரி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்