புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி

வாஷிங்டன்: புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் மாணவர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதியில் ஸ்டேன்டேன் டக்லஸ் என்ற உயர் நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண்ணில் தென்படுபவர்களை சரமாரியாக சுட்டார். இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்தவர்கள் சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து பள்ளிக்கு விரைந்து அனைவரையும் வெளியேற்றினர். பள்ளி வளாகத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயர் நிக்கோலஸ் குரூஸ் (19). இவன் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒழுங்குமுறை நடவடிக்கை காரணமாக நிக்கோலசை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. பள்ளியில் படிக்கும்போதே, எப்போதும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மாணவர்களை பயமுறுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.

பல முறை அவனது பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் குற்றச்சாட்டு தெரிவித்தும் பலனில்லை. இதனால், பள்ளி நிர்வாகம் பல முறை நிக்கோலசை சஸ்பெண்ட் செய்துள்ளது. இறுதியாக நிக்கோலசின் அட்டகாசம் தாங்க முடியாமல் டிஸ்மிஸ் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், தான் நிக்கோலஸ் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மீது வெறித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். அவன் பயன்படுத்திய துப்பாக்கி ஏஆர் 15 ரகம். துப்பாக்கியை கைப்பற்றப்பட்டு, நிக்கோலசிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

புளோரிடா மாகாணத்தில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

You'r reading புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அநியாய மோசடி! - ரூ. 11ஆயிரம் கோடி பணம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஸ்வாகா!..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்