ஊட்டியில் கோர விபத்து: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி

நீலகிரி மாவட்டம் உதகைமண்டலம் அருகே அரசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், ஒரு சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உதகையில் இருந்து குன்னூர் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது மந்தடா என்ற இடம் வழியாக பேருந்து சென்றபோது, இடதுபுறத்தில் பள்ளம் இருப்பதை கவனித்த பேருந்து ஓட்டுனர் வலதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப்பாதையில் இருந்து கவிழ்ந்து 100 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில், உள்ளே இருந்த பயணிகள் உடல் நசுங்கினர்.

இந்த கோர விபத்தில், பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு உதகை மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

You'r reading ஊட்டியில் கோர விபத்து: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல ஆண்பாவம் நடிகருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்