டெல்லி தேர்தலில் பிரச்சார வியூகம்.. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் கெஜ்ரிவால் ஒப்பந்தம்..

Kejriwal ropes in Prashant Kishor for poll campaign in Delhi

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரசார வியூகம் அமைத்து தருவதற்கு பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். இவர், ஐ பேக்(இந்தியன் பேக்) என்ற ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதில் ஏராளமான இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த நிறுவனம், ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கு பிரச்சார வியூகம் அமைத்து கொடுத்து களப்பணியாற்றுகிறது. இதற்காக அந்த கட்சியுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் செய்து கொள்கிறது.

கடந்த 2015ம் ஆண்டி பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமாருக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பெரிய வெற்றியை தேடித் தந்தார் பிரசாந்த் கிஷோர். இதையடுத்து, தனது கட்சியில் பிரசாந்த் கிஷோருக்கு துணை தலைவர் பதவியை நிதிஷ்குமார் கொடுத்தார்.

இப்போது வரை பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராக உள்ளார். ஆனால், சமீப காலமாக அவருக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று வெளிப்படையாக பிரசாந்த் கிஷோர் கூறினார். ஆனால், பாஜகவுடன் இணைந்து பீகாரில் கூட்டணி ஆட்சியமைத்து வருவதால், பிரசாந்த் கிஷோரின் பேச்சை முதலமைச்சர் நிதிஷ்குமார் கேட்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டமசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவாக வாக்களித்தது.

இதன்பின்னர், பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடியுரிைம திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் பாஜகவின் பெரும்பான்மையால் நிறைவேறி விட்டது. இப்போது நீதித்துறையின் பார்வைக்கு அப்பால், இந்த சட்டத்தை அமல்படுத்தும் நிலையில் உள்ள பாஜக அல்லாத இருக்கும் 16 முதலமைச்சர்கள்தான், இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே பஞ்சாப், கேரளா, மேற்குவங்க முதலமைச்சர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து விட்டார்கள். மற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்று கேட்டிருக்கிறார்.

இதனால், பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ராம்சந்த் பிரசாத் மறைமுகமாக பிரசாந்த் கிஷோரை விமர்சித்தார். கட்சியில் இருக்கப் பிடிக்காதவர்கள் வெளியேறலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் ஆம்ஆத்மி கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் நிறவனம் கைகோர்க்கிறது. இதை ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தேர்தல் பணிக்கு இணைந்து பணியாற்ற வளும் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்தினரை ஆம் ஆத்மி வரவேற்கிறது என்று கூறியுள்ளார்.

எனவே, பிரசாந்த் கிஷோர் நிறுவனம் டெல்லியில் பாஜகவுக்கு எதிராக ஆம்ஆத்மிக்கு வேலை பார்க்கச் செல்கிறது. எனவே, பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாயின. சமீபத்தில் அந்த ஐ பேக் நிறுவனத்தினர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

You'r reading டெல்லி தேர்தலில் பிரச்சார வியூகம்.. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் கெஜ்ரிவால் ஒப்பந்தம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அசாமில் ஊரடங்கு தளர்வு.. போராட்டங்கள் குறைந்தது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்