ரயில்வே காலியிடம் : தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் தேர்வு ..

ரயில்வே துறையில் வேலைவாய்ப்புக்கான தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மையங்கள் இருந்தும், அலைக்கழிப்பதாக தேர்வர்கள் வேதனை. இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்காக சுமார் 35 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் (RRB) அறிவித்திருந்தது. கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ரயில்வே நிலைய அலுவலர் முதல் தட்டச்சர் வரையிலான பணிகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பத்தில் இதற்காக பல்வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் 2019 ல் விண்ணப்பித்தவர்களுக்கு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போதுதான் தேர்வு நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத் தேர்வுக்காக விண்ணப்பித்த பலருக்கு கர்நாடக மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு கரூர், திண்டுக்கல், கோவை என தொலைதூர மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது இரண்டாம் கட்டமாக ஜனவரி 23,25 மற்றும் 30 ம் தேதிகளில் பங்கேற்க உள்ளவர்களுக்கு பெங்களூருவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பபட்டுள்ளது.

பெங்களூருவில் எந்த தேர்வு மையம் என்பதை தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன்புதான் தெரிவிக்கப்படுமாம் . இரண்டு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தேர்வு மையங்கள் இருக்கும் போது பெங்களூருவில் மையம் ஒதுக்கப்பட்டு தங்களை அலைக்கழிப்பதாகவும், கொரனோ பரவல் உள்ள நிலையில் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பாக மையத்தை தெரிவித்தால் எப்படி செல்ல முடியும் என்றும் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் பலர் தேர்வுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவரவர் மாவட்டம் அல்லது அண்டை மாவட்டங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி தர வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You'r reading ரயில்வே காலியிடம் : தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் தேர்வு .. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்