நள்ளிரவிலும் களைக்கட்டிய ஈரோடு ஜவுளி சந்தை..

ஈரோடு ஜவுளி சந்தையில் வெளி மாவட்ட வியாபாரிகள் குவிந்ததால் நள்ளிரவிலும் விற்பனை களைகட்டியது.

தீபாவளி பண்டிகைக்குக் கொள்முதல் செய்வதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவு குவிந்ததால் ஈரோடு ஜவுளி சந்தை நள்ளிரவிலும் களை கட்டியது. கொரோனா ஊரடங்கால் 7 மாதங்களுக்குப் பிறகு ஜவுளி விற்பனை சூடு பிடித்துள்ளது.தென்னிந்திய அளவில், ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஈரோடு ஜவுளி சந்தை பிரசித்தி பெற்றது. திங்கள் மாலை முதல் செவ்வாய்க் கிழமை மாலை வரை இடைவேளை இன்றி நடக்கும் இந்த ஜவுளி சந்தை பிரபலமானது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட வியாபாரிகளும், ஆந்திரா, கர்நாடக, கேரள வியாபாரிகளும் பெருமளவில் இங்கு வந்து மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம்.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் ஜவுளி சந்தை மூடப்பட்டது. இதனால் ஜவுளி வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டனர்.ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்ட பின் 3 வாரங்களுக்கு முன்பாக ஜவுளி சந்தைகள் திறக்கப்பட்டன. தீபாவளி பண்டிகையும் நெருங்கி வருவதால் ஜவுளி விற்பனை சூடுபிடித்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு கொள்முதல் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் குவிந்தனர்.

இதனால், இரவு முழுவதும் விடிய விடிய ஜவுளி சந்தையில் கூட்டம் அலைமோதியது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வாடிக்கையாளர்களை இழந்து மீண்டும் புதியதாகத் தொழில் தொடங்கியதை போல் இருப்பதாகக் கூறிய மொத்த விற்பனையாளர்கள், தீபாவளி விற்பனை சற்று மன ஆறுதல் அளிப்பதாகக் கூறினர். இன்னும் அடுத்த இரு வாரங்களில் இதை விட அதிக விற்பனை இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

You'r reading நள்ளிரவிலும் களைக்கட்டிய ஈரோடு ஜவுளி சந்தை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3 வயது குழந்தையை கடத்தியதாக புகார், 241 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய ரயில் கடைசியில் ட்விஸ்ட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்