பாஜக தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது : காங். குற்றச்சாட்டு

தமிழக மக்களின் நலனுக்கும் எதிராகச் செயல்படும் கட்சியாகப் பாரதிய ஜனதா கட்சி உள்ளது எனத் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் குற்றம் சாட்டி உள்ளார்.

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதங்களில் வேலை வாய்ப்புகளைத் தருகிறோம், அதைச் செய்வோம் , இதைச் செய்வோம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் ஆட்சியில் எதையும் செய்யவில்லை.

பீகாரைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும்.
நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பிரச்சனை, ஜிஎஸ்டி.,யால் வணிகர்கள் தொழிற்சாலைகளையும், கடைகளையும் மூடும் நிலை, வேலை இல்லா திண்டாட்டம் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளது. இவற்றைத் திசை திருப்பும் வகையில், மலிவான விளம்பரத்தை பாஜக தேடி வருகிறது.

அதிமுக அரசும், பாஜ.,வினரும் தமிழக மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். ஆனால் மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளதால், இதனை நம்ப மாட்டார்கள். தமிழகத்தில், கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ, அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாஜக அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி கொள்கை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத தவறான நிர்வாகத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புதிதாக வேளாண் சட்டத்தை இயற்றியுள்ளனர்.

இச்சட்டம் விவசாயிகளுக்கும், எதிரானது. அதனால், தான் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். பாஜக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறது. இதற்கு அதிமுகவினர் அமைதி காக்கின்றனர். அதிமுக.,வினர் அவர்களது ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பாஜ.,வினரிடம் அமைதி காத்து வருகின்றனரா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். இதையும் தமிழக மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர்.

இவ்வாறு சஞ்சய் தத் கூறினார்.

You'r reading பாஜக தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது : காங். குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கஞ்சா கடத்தலை தடுக்க மோப்ப நாய் உதவியுடன் சோதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்