டிரண்ட் ஆகும் ஜி ஃப்ரீ டயட்: நமக்கு அவசியமா?

Gluten Free Diet: Identify Fad, Facts And Myths

உடல் நலத்தை பற்றிய தகவல்கள் எப்போதும் இல்லாத வண்ணம் இப்போது பரபரப்பாக பரவுகின்றன. இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்; எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதுபோன்ற குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, எல்லாவற்றுக்கும் இணையத்தையே சார்ந்திருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டு இளம்வாலிப தலைமுறையினர் அதிகமாக 'டயட்' பற்றி யோசிக்கின்றனர்; கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி பிரபலமாகியுள்ளதுதான் 'ஜி-ஃப்ரீ டயட்'.

ஜி-ப்ரீ டயட்

'குளூடென்' (Gluten) - இது இல்லாத உணவுகள் ஜி-ப்ரீ உணவுகள் என அழைக்கப்படுகின்றன. குளூடென் என்பது ஒரு வகை புரதம் (protein) ஆகும். இதை பசையம் என்றும் கூறுகிறார்கள். கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் இது காணப்படுகிறது. லத்தீன் மொழி வார்த்தையான 'குளூ' (glue) என்பதிலிருந்து குளூடென் என்ற பதம் உருவாகியுள்ளது. இவ்வகை தானியங்களை மாவாக அரைத்து அதனுடன் தண்ணீரை கலக்கும்போது ஒட்டுவது போன்ற தன்மை உடையதாக மாறுகிறது. அந்த ஒட்டும்தன்மையை கொடுக்கும் புரதமே குளூடென். கோதுமை, பார்லி வகை தானிய உணவுகளை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பதே 'ஜி-ப்ரீ டயட்' எனப்படுகிறது.

ஜி-ப்ரீ குறித்த நம்பிக்கைகள்

உடல் எடையை குறைத்தல், உடலுக்கு ஆற்றல் அளித்தல், ஆரோக்கியத்தில் முன்னேற்றம், வயிற்று பிரச்னைகள் குணமாகுதல், மலம் கழிதல் ஆகியவை பொதுவாக ஜி-ஃப்ரீ டயட்டின் நன்மைகளாக கூறப்படுகிறது. போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற கருத்து பரவி ஒரு நம்பிக்கையாக நிலைகொண்டுள்ளது. போதுமான மருத்துவரீதியான ஆதாரங்கள் இவற்றுக்கு இல்லை. ஒரேயடியாக கோதுமை, பார்லி போன்ற குளூடென் உணவுகளை தவிர்ப்பது குறித்த கருத்திலிருந்து உடல்நல ஆலோசகர்கள் மாறுபடுகின்றனர்.

யார் தவிர்க்கலாம்?

செலியாக் (Celiac) என்று ஒரு வகை நோய் உள்ளது. குளூடென் புரதத்தை சிலருடைய உடல் ஏற்றுக்கொள்வதில்லை. குளூடென் புரதம் யார்யாருக்கெல்லாம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதோ அவர்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஜி-ஃப்ரீ டயட்டை கைக்கொள்ளலாம். இப்போது பரவி வரும் தகவல்கள் அனைத்துமே செலியாக் நோய்க் குறியீடு உள்ளவர்களைப் பற்றிய ஆய்வுகளில் வெளியான தகவல்கள் குறித்தவையே. 'செலியாக்' பாதிப்பு இல்லாதவர்களுக்கும் அக்குறிப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

குளூடென் என்னும் பசையம் ஒவ்வாமை

செலியாக் குறைபாடு மற்றும் குளூடென் ஒவ்வாமை ஆகிய இரண்டும் பெரும்பாலும் ஒரே அறிகுறிகளை கொண்டிருக்கும்.

அடிக்கடி அடிவயிற்றில் வலி, நாள்பட்ட வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், கைகள் மற்றும் பாதங்கள் மரத்துப்போதல், நாள்பட்ட அசதி, மூட்டு வலி, விளங்க இயலாத குழந்தையின்மை, எலும்பு அடர்த்தி குறைதல் ஆகியவை குளூடென் ஒவ்வாமையின் அறிகுறிகளாகும். ஆனாலும் மருத்துவர்களே இவற்றை உறுதி செய்ய இயலும்.

சரியான புரிதல்

மருத்துவ உண்மைகளுக்கும் குறுகிய காலமே இருக்கக்கூடிய நம்பிக்கை சார்ந்த தகவல்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. சிலருடைய உடல், குறிப்பிட்ட உணவுப்பொருள்களை ஏற்றுக்கொள்ளாது. அதுபோன்றதே குளூடென் புரத ஒவ்வாமை. ஜி-ப்ரீ உணவு என்று மொத்தமாக கோதுமை சார்ந்த எல்லாவற்றையும் தவிர்ப்பது நடைமுறையில் இயலாத ஒன்று மட்டுமல்ல; உடலுக்குத் தேவையான நார்ச்சத்தினை கிடைக்காமல் செய்யும் முடிவுமாகும். ஆகவே, ஜி-ஃப்ரீ டயட் என்பது உங்களுக்கு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினால் அன்றி, போதுமான புரிதல் இல்லாமல் அதை பின்பற்றுவது உடல்நலக் கேட்டுக்கே வழி நடத்தும்.

You'r reading டிரண்ட் ஆகும் ஜி ஃப்ரீ டயட்: நமக்கு அவசியமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தோல்வியால் விரக்தி.. உ.பி.யில் இப்தார் பார்ட்டி வைக்காத பிரதான கட்சிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்