ஆணுக்கான குழந்தைபேறின்மையை மாற்றும்... உறக்கத்தை கொடுக்கும்... இரத்த அழுத்தத்தை சீராக்கும் எளிய உணவு

ஒரு காலத்தில் குழந்தைப்பேறின்மைக்கு பெண் மட்டுமே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆண்களின் விந்துவில் குறைபாடு இருந்தாலும் தம்பதியருக்கு குழந்தைப்பேறு இருக்காது என்பதை அறிவியல் விளக்கியுள்ளது. அதேபோன்று புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் பாதிப்பு பல ஆண்களுக்கு அவதியை கொடுக்கிறது. ஆண்களுக்கான இந்த இரண்டு ஆரோக்கிய குறைபாடுகளையும் களையக்கூடிய பண்பு பூசணி விதைக்கு உள்ளது.

விந்தணுவின் ஆரோக்கியம்
பூசணி விதையில் துத்தநாக (zinc) சத்து உள்ளது. இது விந்தணுவின் சக்தியை பெருக்கி ஆண்களை குழந்தைப்பேற்றுக்கு தகுதியுள்ளவர்களாக்குகிறது. புரோஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் டிஎச்இஏ (Di-hydro epi-androstenedione) என்ற பொருள் பூசணி விதையில் உள்ளது. இது புரோஸ்டேட் சுரப்பி பாதிப்பு மற்றும் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை குறைக்கிறது. பூசணி விதையிலுள்ள பல்வேறு ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள், டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனை அதிகப்படுத்துகின்றன. இவை ஆண்களின் இனப்பெருக்க செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

நீரிழிவு
நம் உடல் செல்கள் மற்றும் திசுக்களில் ஆக்ஸிஜனுக்கு எதிர்வினையாற்றும் நிலையற்ற அணுக்களுக்கும் (ஃப்ரீ ராடிகல்ஸ் Free radicals) ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) இவற்றின் எண்ணிக்கை விகிதமே ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸ் என்று அழைக்கப்படுகிறது. பூசணி விதைகள் இந்த ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸை குறைப்பதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன.

இதய ஆரோக்கியம்
பூசணி விதையில் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. நம் உடலில் கொலஸ்ட்ரால் இரத்தத்திலுள்ள புரதமான லிப்போபுரோட்டீன்கள் மூலம் பயணிக்கிறது. அடர்த்தி குறைந்த லிப்போபுரோட்டீன், எல்டிஎல் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. இது இதய நோயையும் பக்கவாதத்தையும் ஏற்படுத்தக்கூடியது. அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன்கள், எச்டிஎல் அல்லது நல்ல கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. இவை கொலஸ்ட்ராலை உறிஞ்சி மீண்டும் ஈரலுக்கு கொண்டு செல்கிறது. ஈரல் அதை உடலைவிட்டு வெளியே தள்ளுகிறது. எச்டிஎல், இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. பூசணி விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை (LDL: low-density lipoprotein) குறைப்பதோடு நல்ல கொலஸ்ட்ராலின் அளவை (HDL : high-density lipoprotein)அதிகரிக்கின்றன. பூசணி விதையிலுள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

ஆழ்ந்த உறக்கம்
செரோட்டோனின் என்ற நரம்பியல்வேதிப்பொருள் இயற்கையான தூக்கமாத்திரை என்று அழைக்கப்படுகிறது. பூசணி விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நம் உடலில் செரோட்டோனின் ஆக மாற்றப்படுகிறது. இரவு உறங்க செல்வதற்கு முன்பு ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டால் உறக்கம் நன்கு வரும்.

முடக்குவாத வலி
மூட்டுகளிலுள்ள வலியை போக்குவதற்கு வீட்டு வைத்தியத்தில் பூசணி விதைகளே பயன்படுத்தப்படுகின்றன. பூசணி விதைகள், உடல் அழற்சிக்கு எதிராக செயல்புரியக்கூடியன. ஆகவே, முடக்குவாதம் காரணமாக மூட்டுகளில் ஏற்படும் வலியை குறைக்கின்றன. வைட்டமின் இ மற்றும் கரோடினாய்டு போன்ற ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) பூசணி விதையில் உள்ளன. இவை உடல் அழற்சியை தடுத்து நிலையற்ற அணுக்களிலிருந்து (free radicals) செல்களை காக்கின்றன. ஆகவே பல்வேறு நோய்கள் உடலை தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

உடல் எடை பராமரிப்பு
உலக அளவில் பார்த்தால் மக்களில் பாதி எண்ணிக்கையிலானோர் உடல் எடையை குறைத்து கச்சிதமான உடல் அமைப்பை பெற முயன்று வருகின்றனர். பூசணி விதைகள் ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும் நிறைந்தவையாதலால், இவற்றை சாப்பிடவுடன் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். ஆகவே நொறுக்குத் தீனியை சாப்பிடும் விருப்பம் எழாது. உடல் எடை சீராக பராமரிக்கப்படும்.

பூசணி விதைகளை எப்படி சாப்பிடலாம்?
பூசணி விதைகளை காய வைத்து வறுத்து சாப்பிடலாம். பூசணி விதைகளை அரைத்து சாலட் மற்றும் குழம்புகளில் சேர்க்கலாம். பூசணி விதைகளை உலர வைத்து அல்லது வறுத்து அல்லது சீவி கேக்களில் சேர்த்து சாப்பிடலாம். பூசணி விதைகளை ஸ்மூத்தியில் கலந்து பருகலாம்.

You'r reading ஆணுக்கான குழந்தைபேறின்மையை மாற்றும்... உறக்கத்தை கொடுக்கும்... இரத்த அழுத்தத்தை சீராக்கும் எளிய உணவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சினிமாவுக்கு உள்ளாட்சி வரியை ரத்து செய்க.. அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்