இந்தியாவையும் இந்திராவையும் உலுக்கிய வரலாற்று சிறப்பு மிக்க 1974 ரயில்வே ஸ்டிரைக்கின் கதாநாயகன் ஜார்ஜ் பெர்னாண்டஸ்!

1974 Historical railway strikes Hero George Fernandes

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இந்திய ரயில்வே துறையின் வீரம் செறிந்த 20 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை குலைநடுங்க செய்த தொழிற்சங்க போராளிதான் மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

1970களில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருந்தது. சோசலிச தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்டோர் இந்திராவுக்கு எதிரான அணியில் முனைப்பு காட்டிய காலம் அது.

1971-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ரேபரேலி தொகுதியில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயணனை 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் இந்திரா காந்தி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்திராவின் வெற்றிக்கு எதிராக ராஜ்நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தியாவே ஆவலுடன் அந்த தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலம். 1974-ம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். 1974-ம் ஆண்டு மே 8-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை 20 நாட்கள் இந்திய ரயில்வே துறை முற்றிலுமாக முடக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள் சிறைபடுத்தப்பட்டனர். நாடு முழுவதும் மிகவும் கட்டுக்கோப்புடன் நடத்தப்பட்ட இந்த ரயில்வே போராட்டத்துக்கு தலைமை வகித்தவர் அன்றைய இளம் போராளி ஜார்ஜ் பெர்னாண்டஸ்தான். அவரது தீரமிக்க வியூகத்தால் அன்றைய இந்திரா காந்தி அரசு குலைநடுங்கிப் போனது.

இதனால்தன் 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரகடனம் செய்த அவசர நிலை காலத்தில் பெர்னாண்டஸ் வேட்டையாடப்பட்டார். இந்திரா ராணுவத்தின் கொடுங்கரங்களில் தப்பி ஓடி தலைமறைவாக வாழ்ந்தார் பெர்னாண்டாஸ். அன்று ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு அடைக்கலம் தந்தது முதல்வராக இருந்த கருணாநிதியின் தமிழ்நாடு.

1976-ம் ஆண்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவசர நிலை பிரகடனம் முடிவுக்கு வந்த நிலையில் 1977-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் முசாபூர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றியை அறுவடை செய்தார் பெர்னாண்டஸ். அப்போதைய ஜனதா அரசில் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

சமூக நீதி கோட்பாடுகளை உயிர் மூச்சாக கொண்டு சோசலிஷ சித்தாந்த தொண்டராக தம் வாழ்நாளை அர்ப்பணித்த மாமனிதர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பது மிகையல்ல!

You'r reading இந்தியாவையும் இந்திராவையும் உலுக்கிய வரலாற்று சிறப்பு மிக்க 1974 ரயில்வே ஸ்டிரைக்கின் கதாநாயகன் ஜார்ஜ் பெர்னாண்டஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்