இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதி இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான்! உளவுத் துறை தகவல்!

Another Easter Sunday bomber visited India in 2017, inteligence official said.

இலங்கையில் மனிதவெடிகுண்டாக வெடித்த தீவிரவாதி முகமது முபாரக் ஆஷான், கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான் என்று உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.


இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று, 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இது வரை 359 பேர் வரை பலியாகியுள்ளனர். 9 தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை தாங்களே நிகழ்த்தியதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அந்த 9 மனித வெடிகுண்டுகளில் ஜகரான் ஹாசிம் என்பவன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து இங்குள்ள சில அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளான் என்பதை இந்திய உளவுத் துறை கண்டுபிடித்தது. கோவையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்திய போது ஹாசிமைப் பற்றிய பல தகவல்கள் கிடைத்தன. அவன் கேரளாவில் மலப்புரம், தமிழகத்தில் கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஆகிய ஊர்களுக்கு சென்றதும், பல மாதங்கள் தமிழகத்தில் தங்கியதும் தெரிய வந்தன. மேலும், கோவையில் சிக்கியவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்த பதிவுகள் மூலம், இலங்கையில் மிகப் பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்ற ஹாசிம் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இந்திய அரசு, இலங்கையை எச்சரித்தது. ஆனாலும், இலங்கை அரசு பாதுகாப்பு விஷயத்தில் அசட்டையாக இருந்து விட்டது.
தற்போது, இலங்கையில் மனிதவெடிகுண்டாக தேவாலயத்தில் வெடித்து சிதறிய முகமது முபாரக் ஆஷான் என்ற தீவிரவாதியும் இந்தியாவுக்கு 2017ம் ஆண்டில் 2 முறை வந்து சென்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இது பற்றி, மத்திய உளவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஆஷான் 2 முறை இந்தியாவுக்கு வந்த போதும் பல ஊர்களுக்கு சென்று பலரை சந்தித்து பேசியிருக்கிறான். தமிழகத்திற்கும் அவன் சென்றிருக்கிறான். எனவே, அவனது தொடர்புகள் மற்றும் சதித்திட்டங்கள் குறித்து உளவுத் துறையும், தேசிய புலனாய்வு நிறுவனமும்(என்.ஐ.ஏ) தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளன’’ என்றார்.

இராமநாதபுரத்தில் 10 பேர் ஊடுருவியுள்ளனர் - பெங்களூரு போலீசுக்கு வந்த மர்ம போன்... தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்....

You'r reading இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதி இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான்! உளவுத் துறை தகவல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக முன்னாள் எம்.பி.வசந்தி ஸ்டான்லி காலமானார்; திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்