13 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய இந்திய ரயில்வே முடிவு!

உரிய அனுமதி பெறாமல் நீண்ட காலமாக விடுமுறையில் இருக்கும் 13 ஆயிரம் தொழிலாளர்களை பணிநீக்க செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதிலும் மத்திய ரயில்வே துறையில் 13 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் பணிக்கு வராமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகின்றது. இவர்கள் சட்டவிரோதமாக விடுப்பு எடுத்ததுடன், அதற்கான ஊதியத்தையும் பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு ஏமாற்றுபவர்களை அடையாளம் காண கணக்கெடுப்பு நடத்தும்படி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, சுமார் 13,000 தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ரயில்வேதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணிக்கு வராமல் நீண்டகாலம் முறைகேடாக விடுமுறையில் இருப்பவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு பணி நீக்கம் செய்வது தொடங்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள், நீண்ட கால விடுப்பில் இருக்கும் ஊழியர்களைக் கண்டறிந்து உரிய நடைமுறைகளின் படி பணி நீக்கம் செய்யவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading 13 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய இந்திய ரயில்வே முடிவு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து: போக்குவரத்து பாதிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்