கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன்.. கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய மோடி

Isro chief Sivan breaks down as PM Modi hugs him after moon landing glitch

இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து மக்களுக்கு உரையாற்றி விட்டு பிரதமர் மோடி புறப்படும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்து நிலவை சுற்றிவந்த லேண்டர் விக்ரம், இன்று அதிகாலை 1.30 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிகழ்வை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு(செப்.6) பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டறைக்கு வந்து விஞ்ஞானிகளுடன் காத்திருந்தார், 70 பள்ளி மாணவர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அதிகாலை சரியாக 1.38 மணிக்கு லேண்டர் விக்ரம், அதன் சுற்றுவட்டப்பாதைகளை கடந்து நிலவுக்கு 2.1 கி.மீ. தூரத்தில் இருந்தது. இதனால், விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ந்தனர். அடுத்த சில வினாடிகளில் லேண்டர் விக்ரம் நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென லேண்டர் விக்ரமில் இருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டறைக்கு தகவல் துண்டித்து போனது. இதனால், பரபரப்படைந்த விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ தலைவர் சிவன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

அப்போது, விஞ்ஞானிகளிடம் பேசிய பிரதமர் மோடி, ‘‘மனம் தளர்ந்து விடாதீர்கள். வரலாற்று சிறப்பு மிக்க முயற்சியில் மிகப்பெரிய இலக்கை எட்டியுள்ளீர்கள். இது சாதாரண விஷயமல்ல. லேண்டர் விக்ரமுடன தகவல் தொடர்பு கிடைத்து விட்டால், நாம் பல அரிய விஷயங்களை அறியலாம்’’ என்று பாராட்டினார்.

இதன்பின்னர், இன்று காலை 8 மணிக்கு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்தபடி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்துடன் தொடங்கிய அவர் பேசுகையில், ‘‘விஞ்ஞானிகள் நேற்்றிரவு எப்படி மனநிலையில் இருந்தார்கள் என்பதை நேரில் பார்த்து உணர்ந்ேதன். பல இரவுகள் தூங்காமல் நீங்கள் பணியாற்றியதை அறிவேன். மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென எல்லாமே மறைந்து விட்டது. ஏன் இப்படி ஆனது என்ற கேள்வி மனதில் ஏற்பட்டது.

ஆனாலும், நமக்கு ஏற்பட்ட இடையூறுகளால் நமது முயற்சிகளை கைவிட மாட்டோம். இந்தியா என்றும் உங்களுக்கு துணையாக இருக்கும். நீங்கள் கொடுக்கும் உழைப்பு ஈடு இணையற்றது. உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விஞ்ஞானத்தி்ல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்’’ என்று பேசினார்.

பிரதமர் மோடி பேசி விட்டு, இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புறப்பட்ட போது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டிப்பிடித்து பிரதமர் மோடி தேற்றினார். அதன்பின், மோடி விடை பெற்று புறப்பட்டார்.

You'r reading கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன்.. கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய மோடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேகமாய் வந்து போனவன்.. காலமானார் கவிஞர் முத்து விஜயன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்