வி.ஜி.பி. மகன்கள் மீது பெங்களூரு போலீஸில் நில மோசடி வழக்கு.. குடும்ப மோதல் காரணம்?

FIR registered on V.G.P. sons in land fraud charge in karnataka police

பிரபல தொழிலதிபர் வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்கள் மீது கர்நாடக போலீஸ் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. குடும்பச் சண்டையில் நில அபகரிப்பு செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான தொழிலதிபர்கள் வி.ஜி.பி. சகோதரர்கள். இவர்களின் வாரிசுகள் கடந்த சில ஆண்டுகள் வரை ஒற்றுமையாக இருந்தனர். தற்போது இவர்களிடையே சொத்து பிரிப்பதில் சண்டை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

இந்நிலையில், வி.ஜி.பன்னீர்தாஸின் 2வது சகோதரரான செல்வராஜின் மகன் வினோத்ராஜ், பெங்களூரு கஹ்கலிபுரா போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், வி.ஜி.பன்னீர்தாஸின் மகன்களான பாபுதாஸ், ரவிதாஸ், ராஜாதாஸ் ஆகியோர் மோசடியாக தனது நிலத்தை அபகரித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். புகாரில் அவர் கூறியுள்ளதாவது:

பெங்களூரு தெற்கு தாலுகா கெங்கேரி ஹோப்ளி பி.எம்.காவல் என்ற பகுதியில் சர்வே எண் 131ல் உள்ள 54 ஏக்கர் நிலம் எனது குடும்பத்திற்கு சொந்தமானதாகும். இதில் 131/5, 131/6 ஆகிய சர்வே எண்களில் 7ஏக்கர் 10 குண்டே நிலம் எனது பெயரில் இருந்தது. இதை விற்பதற்காக நான் 1996ல் பாபுதாஸுக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்தேன். அவர் அதில் ஒன்றரை ஏக்கரை எனக்கு தெரியாமல் விற்று விட்டார்.

இது தெரிந்ததும் நான் அவருக்கு அளித்திருந்த பவரை கடந்த பிப்ரவரியில் ரத்து செய்து விட்டேன். ஆனால், அதற்குப் பிறகும் அவர் மீதி நிலத்தையும் விற்று விட்டார். அவர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்து அந்த விற்பனைகளை ரத்து செய்து, எனது நிலத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரின் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிலத்தை வாங்கியதாக கூறப்படும் ராவுத் அமோல், பாக்கியம்மா ஆகியோர் மீதும் எப்.ஐ.ஆரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

You'r reading வி.ஜி.பி. மகன்கள் மீது பெங்களூரு போலீஸில் நில மோசடி வழக்கு.. குடும்ப மோதல் காரணம்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிவசேனாவுடன் கைகோர்த்து நாளையே ஆட்சி அமையும்.. சரத்பவார் உறுதி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்