நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார்

Parliament winter session starts today

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு கூடும் மக்களவையில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பதவியேற்கிறார். சுஷ்மா, ஜெட்லி உள்பட 10 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 2வது முறையாக பதவியேற்றதும் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் 35 சட்ட மசோதாக்களும், மாநிலங்களவையில் 32 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்கள் மீது போதிய நேரம் விவாதம் நடத்தப்படாமல், அவசர, அவசரமாக நிறைவேற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனாலும், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு மக்களவை கூடுகிறது. இதில், அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

வேலூர் தொகுதி எம்.பி.யாக தேர்வான திமுகவின் கதிர் ஆனந்த், பீகார் எம்.பி. பிரின்ஸ்ராஜ், ம.பி. மாநில எம்.பி. ஹமித்ரசிங், மகாராஷ்டிரா எம்.பி. சீனிவாஸ் தாதாசாகேப் பாடீல் ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்று கொள்கின்றனர்.

மேலும், இந்த கூட்டத் தொடரிலும் பல்வேறு புதிய சட்டமசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இ-சிகரெட்டுகளுக்கு தடை, கார்ப்பரேட் வரிக்குறைப்பு போன்ற அவசரச் சட்டங்களுக்கு மாற்றுச் சட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தொடரில் காஷ்மீர் விவகாரம், பொருளாதார சரிவு, அயோத்தி தீர்ப்பு, சபரிமலை தீர்ப்பு உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. திமுக உறுப்பினர்கள், சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப உள்ளார்கள்.

இதனால், அவையை சுமுகமாக நடத்துவதற்காக அனைத்து கட்சிக் கூட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடும் தனித்தனியாக நடத்தினர். மத்திய அரசின் சார்பிலும் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய அரசு அனைத்து விஷயங்களையும் விவாதிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்திருக்கிறது. எனினும், நாடாளுமன்றத்தில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

You'r reading நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்தியத் தொடர்புகள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்