குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: இலங்கை இந்துக்களை ஏன் சேர்க்கவில்லை? ப.சிதம்பரம் எழுப்பிய கேள்வி

This is slap on the face of Parliament says, P.Chidambaram on CAB.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நேற்று விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு, 2014ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவுக்கு வந்த முஸ்லீம் அல்லாத மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும். இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை கிடைக்கும்.

இந்த மசோதா மீது மாநிலங்களவையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
நாட்டில் ஏற்கனவே குடியுரிமைச் சட்டம் உள்ளது. பிறப்பு, பதிவு போன்ற விஷயங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. உலக அளவில் குடியுரிமைக்கு இப்படித்தான் பின்பற்றுகிறார்கள். ஆனால், இந்த அரசு குடியுரிமை வழங்குவதை தன்னிச்சையாக தானே முடிவு செய்யும் முறையை அமல்படுத்துகிறது.
இந்த மசோதா மீது சில கேள்விகளை நான் எழுப்புகிறேன். இதற்கு இந்த அரசாங்கத்தில் உள்ள யாராவது பதிலளிக்கும் பொறுப்பை எடுத்து கொள்ளுங்கள். மசோதாவை சட்டத் துறைக்கு அனுப்பி கருத்து கேட்கப்பட்டதா? எதற்காக இந்த மசோதாவில் அகமதியாஸ் மற்றும் ஹசாராஸ் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை? இந்தச் சட்டத்தின் கீழ் பயனடையப் போவது யார்? அவர்கள் மத அடையாளத்தின் அடிப்படையில் மட்டுமே பயனடைவார்களா? அப்படியானால் மொழிரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களை ஏன் சேர்க்கவில்லை? அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களை ஏன் சேர்க்கவில்லை?

இந்த மசோதா ஒரு நயவஞ்சகமான மசோதாவாக உள்ளது. அண்டை நாடுகள் என்று பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை கொண்டு,
அங்கு மதரீதியாக பாதிக்கப்படுவர்களை எடுத்து கொண்டிருந்தால், பூடானைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், இலங்கையைச் சேர்ந்த இந்துக்களை ஏன் எடுத்து கொள்ளவில்லை? இது போன்ற கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்கள்?

இது நிச்சயமாக அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.இந்தச் சட்டத்துக்கு கண்டிப்பாக நீதிமன்றம் தடை விதிக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்து செல்ல வைக்கிறீர்கள். அங்கு வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் சட்ட மசோதாவை முடிவு செய்யப் போகிறார்கள். நீதிமன்றம் முடிவு செய்வது என்பது நாடாளுமன்றத்தின் மீது விழும் அடி. இது மோசமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறி, இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து திமுக, மதிமுக உறுப்பினர்கள் பேசினர். திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் இரு அவைகளிலும் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். அதே சமயம், அதிமுக இரு அவைகளிலும் ஆதரவாக வாக்களித்தது.

You'r reading குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: இலங்கை இந்துக்களை ஏன் சேர்க்கவில்லை? ப.சிதம்பரம் எழுப்பிய கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகள் எதிராக 105 வாக்குகள்... ராஜ்யசபாவிலும் நிறைவேறியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்