தெலங்கானா என்கவுன்டர் குறித்து விசாரிப்பதற்கு நீதிபதி சிர்புர்கர் கமிஷன்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Ex-SC judge VS Sirpurkar to head inquiry panel into Telangana encounter

தெலங்கானா என்கவுன்டர் குறித்து விசாரிக்க, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் புறநகரில் கடந்த நவம்பர் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் ஒருவர், வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள், திரையுலகினர் என்று பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை எழுப்பினர்.

பலாத்காரம் மற்றும் எரிப்பு சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப், சிவா, சென்னகேசவலு, நவீன் ஆகிய 4 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். அவர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் கடந்த 6ம் தேதி அதிகாலையில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாகவும், அதனால் என்கவுன்டரில் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.

இந்த என்கவுன்டருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப்குமார், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், என்கவுன்டர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் 2014ம் ஆண்டில் வகுத்துள்ள விதிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இன்று(டிச.12) பிறப்பித்த உத்தரவு வருமாறு:

தெலங்கானா என்கவுன்டர் குறித்து முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் மும்பை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ரேகா பால்தோடா, முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட கமிஷன் விசாரணை நடத்தும். இந்த விசாரணை கமிஷன் டெல்லியில் செயல்படும். ஆறு மாதங்களுக்குள் விசாரணை மேற்ெகாண்டு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.

You'r reading தெலங்கானா என்கவுன்டர் குறித்து விசாரிப்பதற்கு நீதிபதி சிர்புர்கர் கமிஷன்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அயோத்தி நில வழக்கில் சீராய்வு மனு ஏற்கப்படுமா? நீதிபதிகள் அறையில் விசாரணை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்