குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் போராட்டம்.. சோனியா, ராகுல் பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் சோனியா தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் (ராஜ்காட்) ஒற்றுமைக்கான சத்தியாகிரகம் என்ற பெயரில் காங்கிரசார் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அகமது படேல், கமல்நாத் உள்ளிட்ட மூத்த தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

சோனியா, ராகுல், மன்மோகன்சிங் ஆகியோர் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையில் மதச்சார்பின்மை குறித்து கருத்துகளை வாசித்தனர். பின்னர், போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்காக அனைவரும் ஒரு நிமிடம் மவுனம் அனுசரித்தனர்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பி நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தை சீர்குலைப்பதையும், தேசத்தின் குரலை ஒடுக்க முயற்சிப்பதையும் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

பிரியங்கா காந்தி பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களில் உயிர்நீத்தவர்களின் பெயரால், அரசியலமைப்பு சட்டத்தை காக்க உறுதியேற்போம் என அழைப்பு விடுத்தார்.

இந்த போராட்டத்தில் பேசிய ராஜஸ்தான், மத்திய பிரதேச முதலமைச்சர்கள் அசோக் கெலாட், கமல்நாத் ஆகியோர் தங்கள் மாநிலத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்தனர். சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் சார்பில் பங்கேற்ற அம்மாநில அமைச்சர் சிங்தியோவும், தங்கள் மாநிலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று கூறினார்.

You'r reading குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் போராட்டம்.. சோனியா, ராகுல் பங்கேற்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.. துணை ஜனாதிபதி வழங்கினார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்