பணமதிப்பிழப்பை விட 2 மடங்கு பேரழிவு.. என்.ஆர்.சி பற்றி ராகுல் கருத்து..

தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) ஆகியவை பணமதிப்பிழப்பை விட 2 மடங்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மேலும், பாஜக அரசு அடுத்த கட்டமாக என்.ஆர்.சி கொண்டு வந்து அதன்மூலம் குடியுரிமை கிடைக்காத முஸ்லிம்களை நாடு கடத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், என்.ஆர்.சி திட்டத்தை நிறைவேற்ற பாஜக ஆதரவு கட்சியான ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளே மறுத்துள்ளன.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் 135வது ஆண்டு விழா இன்று(டிச.28) கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:

என்பிஆர் மற்றும் என்சிஆர் என்பது ஏழை மக்களிடம், அவர்கள் இந்தியரா என்று கேள்வி எழுப்பும் திட்டமாகும். இதில் உரிய சான்றுகள் இல்லாத ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். என்பிஆர், என்சிஆர் ஆகியவை மிகவும் பேரழிவை ஏற்படுத்தும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட 2 மடங்கு அதிகமாக பாதிப்பை இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தும்.

மத்திய அரசு ஏழைகளின் பணத்தை எல்லாம் எடுத்து பிரதமர் மோடியின் 15 கார்ப்பரேட் நண்பர்களுக்கு வாரி வழங்குகிறது. அந்த நண்பர்கள் எந்தவித ஆவணங்களும் காட்ட வேண்டியதே இல்லை. ஏழைகளுக்குத்தான் பாதிப்பு எல்லாமே.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

You'r reading பணமதிப்பிழப்பை விட 2 மடங்கு பேரழிவு.. என்.ஆர்.சி பற்றி ராகுல் கருத்து.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமர் மோடியின் உரையை கேட்பதற்கு ஜனவரி 16ஆம் தேதியன்று மாணவர்கள் பள்ளிக்கு வர உத்தரவு..! முதலமைச்சர் எடப்பாடி விளக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்