சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு.. ஜன.15ல் மகர விளக்கு பூஜை

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஜன.15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் தேதி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். பல மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 48 நாள் கடும் விரதம் இருந்து வந்து ஐயப்பனை தரிசிப்பார்கள்.

கடந்த 16ம் தேதியன்று நடை திறக்கப்பட்டது. பல ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். 27ம் தேதியன்று மண்டல பூஜைகள் நடைபெற்றது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்றிரவு கோயில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை காட்டுவார். தொடர்ந்து 18ம் படிக்கு மேல் உள்ள நெருப்பு ஆழியில் தீபம் ஏற்றப்படும்.

ஜனவரி 15ம் தேதியன்று முக்கிய விசேஷமான மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று பந்தளம் கொட்டாரத்தில் இருந்து திருவாபரணம் கொண்டு வந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்று இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில பெண் சமூக செயற்பாட்டாளர்கள் தாங்கள் சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டுமென்று கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். ஆனால், சுப்ரீம் கோர்ட் அதில் உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது. இதனால், சபரிமலைக்கு வர முயற்சிக்கும் பெண் ஆர்வலர்களை பாதிவழியில் கேரள போலீசாரே தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

You'r reading சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு.. ஜன.15ல் மகர விளக்கு பூஜை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டாலின், கனிமொழி வீ்டுகளில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கோலம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்