டெல்லி நீதிபதி மாற்றம் பிரியங்கா, ராகுல் கண்டனம்..

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்டது கவலை அளிப்பதாகப் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ராகுல்காந்தியும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.



டெல்லியில் கடந்த 23ம் தேதியன்று சிஏஏ ஆதரவு மற்றும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களிடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து நான்கு நாட்களாக நடந்த வன்முறைச் சம்பவங்களில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ்மந்தர், சமூக ஆர்வலர் பராக் நக்வி ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தனர். நேற்று(பிப்.26) இந்த வழக்கு நீதிபதி எஸ்.முரளிதர், நீதிபதி தல்வந்த் சிங் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, சில வீடியோக்களை நீதிபதிகள் பார்வையிட்டனர். அவற்றில், டெல்லி பாஜக பிரமுகர் கபில்மிஸ்ரா உள்ளிட்ட சிலர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியிருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதைப் பார்த்த நீதிபதி முரளிதர், இப்படி வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியவர்கள் மீது ஏன் எப்ஐஆர் கூட போடவில்லை? நீங்கள் பாரபட்சம் காட்டாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால், கலவரங்களைத் தடுத்திருக்கலாம். 1984ல் நடந்ததை போன்று(சீக்கியர் கொல்லப்பட்ட கலவரம்) மீண்டும் ஒரு கலவரம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத இ.பி.கோ. 153(ஏ)(பி)ன் கீழ் எப்.ஐ.ஆர். போட்டிருக்க வேண்டும். டெல்லியில் 4 நாட்களாக நீடித்து வரும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வழக்கைத் தள்ளி வைத்தார்.

இந்நிலையில், நீதிபதி எஸ்.முரளிதர் நேற்றிரவு பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் எடுத்த முடிவு என்றாலும், நேற்றிரவு அவசரமாக உத்தரவு பிறப்பித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் பதிவாகியுள்ளன. இதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
டெல்லி ஐகோர்ட் நீதிபதி எஸ்.முரளிதர் ஒரு உத்தரவு பிறப்பித்த சூழலில், நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருவதுடன் வேதனை மற்றும் அவமானமாகத் தெரிகிறது.

சுதந்திரமான நீதித்துறை மீது லட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், அந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் மத்திய அரசு முறுக்கிக் கொண்டு செயல்படுவது கவலை தருகிறது.
இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

இதே போல், ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், பணிமாற்றம் செய்யப்படாத துணிவு மிக்க நீதிபதி லோயாவை நினைவுகொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அமித்ஷா மீதான வழக்கை விசாரித்த சிபிஐ கோர்ட் நீதிபதி லோயா, கடந்த 2014 டிசம்பரில் திடீர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading டெல்லி நீதிபதி மாற்றம் பிரியங்கா, ராகுல் கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லி போலீசாரை கடுமையாக விமர்சித்த ஐகோர்ட் நீதிபதி மாற்றம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்