நாடாளுமன்றத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் கண்ணை கட்டி தர்ணா

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலாம்பூர் போன்ற பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 46 பேர் வரை உயிரிழந்தனர். பாஜக பிரமுகர்களின் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள், சிஏஏ ஆதரவு போராட்டங்களால்தான் கலவரம் வெடித்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக, காலை 10 மணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே திரண்டனர். அவர்கள் கண்களைக் கறுப்பு துணியால் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே பொறுப்பு என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். மத்திய பாஜக அரசைக் கண்டித்து அவர்கள் பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர். 20 நிமிடங்கள் போராட்டம் நடத்தி விட்டுக் கலைந்து சென்றனர்.

You'r reading நாடாளுமன்றத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் கண்ணை கட்டி தர்ணா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சட்டசபை பட்ஜெட் தொடர் ஏப்.9 வரை கூடுகிறது...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்