100 கி.மீ. நடந்தே சென்ற கர்ப்பிணிக்கு உதவிய மக்கள்..

Coronavirus: Pregnant woman, her husband walk over 100km without food.

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவருடன் 100 கி.மீ. தூரம் நடந்தே சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு உணவு கொடுத்து உதவிய மக்கள், அவர்கள் மீதி தூரம் செல்ல ஆம்புலன்சும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.


உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ரயில்கள், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழில், ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், உணவு மற்றும் தங்கும் இடமும் இல்லாமல் சாலைகளில் தவிக்கின்றனர். பலர் கூட்டம், கூட்டமாக நடந்தே செல்கின்றனர்.

இதே போல், உத்தரப்பிரதேசத்தில் ஒரு 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் 2 நாட்களாக நடந்தே சென்றிருக்கிறார். சகரான்பூரில் வக்கில் என்பவர் ஒரு சிறிய தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி யாஷ்மினுடன் அந்த தொழிற்சாலை உரிமையாளர் வீட்டின் ஒரு பகுதியில் தங்கியிருந்தார்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் வக்கில், யாஷ்மின் தம்பதியை அந்த தொழிற்சாலை உரிமையாளர் வெளியே அனுப்பியிருக்கிறார். யாஷ்மின் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால், அந்த தம்பதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பஸ் வசதி இல்லாததால் தங்கள் சொந்த ஊரான புலாந்சார் என்ற ஊருக்கு நடக்கத் தொடங்கினர். 2 நாட்களில் சுமார் 100 கி.மீ. தூரம் நடந்து சென்ற அவர்கள் களைப்பாகி, மிரட் பஸ் ஸ்டாண்ட் அருகே படுத்திருந்தனர்.

அவர்களைக் கவனித்த உள்ளூர் வாசிகள் நவீன்குமார், ரவீந்திரா ஆகியோர், ஏதாவது உதவி வேண்டுமா? என்று விசாரித்தனர். அப்போதுதான் அவர்கள் 100 கி.மீ. தூரம் நடந்தே வந்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அந்த இளைஞர்கள் உள்ளூர் மக்களை அழைத்து வந்து அந்த தம்பதிக்கு உணவு, உடைகள் கொடுத்தனர். பின்னர், பலரும் சேர்த்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அந்த தம்பதியைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அந்த தம்பதியும், உங்களின் மூலம் கடவுள்தான் எங்களுக்கு உதவியிருக்கிறார் என்று நன்றி கூறிவிட்டு ஆம்புலன்சில் சென்றனர்.

You'r reading 100 கி.மீ. நடந்தே சென்ற கர்ப்பிணிக்கு உதவிய மக்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்காவில் கொரோனா பலி 2 வாரங்களில் அதிகமாகும்.. டிரம்ப் எச்சரிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்