கொரோனா தடுப்பு.. இன்றிரவு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள்.. மோடி விடுத்த வேண்டுகோள்

PM Modi call for switching off lights for 9 minutes at 9pm today.

பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின்படி, இன்றிரவு 9 மணிக்கு நாடு முழுவதும் மக்கள் மின்விளக்குகளை அணைத்து அகல்விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் இது வரை 3072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.


இந்நிலையில், நாடு முழுவதும் மக்கள் கொரோனா ஒழிப்பில் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், இன்றிரவு(ஏப்.5) 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு ஏற்றுமாறு பிரதமர் மோடி நேற்று முன் தினம் அழைப்பு விடுத்தார். அவர் வெளியிட்ட வீடியோவில், கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போரில், நமது ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் வரும் 5ம் தேதியன்று வீடுகளில் விளக்கு ஏற்ற அழைப்பு விடுக்கிறேன். கொரோனா இருளை அகற்றும் வகையில் அன்றிரவு இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, நான்கு மூலைகளிலும் ஒளியைப் பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். செல்போன் பிளாஷ் லைட் வெளிச்சத்தைக் காட்ட வேண்டும். இதை 9 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். அதே சமயம், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். கூட்டமாகச் சேர்ந்து விளக்கு ஏற்றக் கூடாது என்று அவர் கூறியிருந்தார்.

அதன்படி, இன்றிரவு 9 மணிக்கு மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுகிறார்கள். அதேசமயம், தெருவிளக்குகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை வழக்கம் போல் இயக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், மக்களும் தங்கள் வீடுகளில் ஏ.சி, பிரிட்ஜ் உள்ளிட்ட மற்ற மின்சாதனங்களை வழக்கம் போல் பயன்படுத்தலாம் என்றும் அரசு கூறியுள்ளது.

You'r reading கொரோனா தடுப்பு.. இன்றிரவு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள்.. மோடி விடுத்த வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நன்றி சொல்லாதீர்கள், கட்டளையிடுங்கள். முதல்வருக்கு நடிகர் மெசேஜ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்