சச்சின் பைலட் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் ராஜஸ்தான் சபாநாயகர் மேல்முறையீடு..

SLP filed by Rajasthan Speaker Joshi against the stay order passed by the High Court.

சச்சின்பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜஸ்தான் சபாநாயகர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட், தன்னை முதல்வராக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இந்நிலையில், பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. இதற்கேற்ப, பைலட்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை அழைத்துச் சென்று டெல்லியில் முகாமிட்டார்.

ஆனால், ஜெய்ப்பூரில் காங்கிரஸ் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் கெட்டுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. 200 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் கெலாட்டுக்கு மெஜாரிட்டி நீடிக்கிறது. இதனால், பைலட்டுடன் சென்ற 4 எம்.எல்.ஏ.க்கள் பின்வாங்கி, மீண்டும் கெலாட் முகாமிற்கு வந்தனர்.இந்நிலையில், பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் சி.பி.ஜோஷி ஒரு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை அந்த எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் ஒட்டினர். நோட்டீசுக்கு 2 நாளில் பதிலளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.சபாநாயகர் ஜோஷி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ. பிருத்விராஜ் மீனா உள்பட 19 பேரும், ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், வரும் 24ம் தேதி வரை சபாநாயகர் ஜோஷி அந்த 19 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து, சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சபாநாயகர் சி.பி.ஜோஷி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறியிருந்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.அதன்படி, சபாநாயகர் சி.பி.ஜோஷி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சிறப்பு அனுமதி மனு(மேல்முறையீடு) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

You'r reading சச்சின் பைலட் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் ராஜஸ்தான் சபாநாயகர் மேல்முறையீடு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ.வுக்கும் கொரோனா பாதிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்