நீட், ஜேஇஇ தேர்வு பிரச்சனை.. காங். முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை..

Sonia Gandhi hold meeting with Congress CMs to discuss NEET, JEE exams.

நீட், ஜேஇஇ தேர்வு ரத்து செய்வது, ஜிஎஸ்டி பகிர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் முதல்வர்களுடன் காணொலி காட்சியில் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காகத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை(நீட்) சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. இந்தாண்டு இதற்காக தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்பு தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வு மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வு(ஜேஇஇ) ஆகியவை நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை நடத்தக் கூடாது என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அவற்றை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வும், செப்.1 முதல் செப்.6 வரை ஜேஇஇ தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கிராமப்புறங்களில் படிக்க வாய்ப்பில்லாத மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு இந்த தேர்வுகளை நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் உள்படப் பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை மத்திய பாஜக அரசு ஏற்கவில்லை.

இந்த தேர்வுகளை ரத்து செய்வது, ஜி.எஸ்.டி வரி பகிர்வு ஆகியப் பிரச்சனைகள் குறித்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று காணொலி காட்சியில் விவாதிக்க உள்ளார். இந்த கூட்டத்தில் திரிணாமுல் கட்சி ஆளும் மேற்குவங்கம், சிவசேனா கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா, ஜேஎம்எம் கூட்டணி ஆளும் ஜார்கண்ட் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்படும் முடிவுகளை மத்திய அரசு மற்றும் பிரதமருக்குக் கடிதம் மூலம் சோனியா காந்தி தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

You'r reading நீட், ஜேஇஇ தேர்வு பிரச்சனை.. காங். முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விலக்கப்படுமா.. ஆக.29ம் தேதி தெரியும்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்