இதுதான் என் லட்சியம் - கொரோனாவால் கஷ்டப்பட்ட இளைஞரின் சபதம்...!

This is my ambition - the vow of the young man who suffered from corona ...!

கொரோனாவால் வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்ட கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபர் கொரோனாவை அழிக்க சபதம் எடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவால் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம். தொழில், வருமானம், வேலையை இழந்த பலர் பட்டினியில் தவிக்கின்றனர். பல தொழில்கள் நலிந்து விட்டன. பல தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பும், சம்பள குறைப்பும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா காரணமாக வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்ட கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபர், கொரோனாவை பழி வாங்க சபதம் எடுத்து அதற்கான வேலையையும் தொடங்கிவிட்டார். திருச்சூர் அருகே உள்ள திருக்கூர் பகுதியை சேர்ந்தவர் பிஜு பவித்ரா. இவர் அப்பகுதியில் திருமண வாகனங்களை அலங்கரிக்க பயன்படுத்தும் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை நடத்தி வந்தார். கொரோனாவுக்கு முன்புவரை இவரது கடையில் நல்ல வியாபாரம் இருந்து வந்தது.



ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அதிகமாக திருமணங்கள் எதுவும் நடைபெறாததால் சுத்தமாக வியாபாரம் இல்லை. இதனால் கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. பிழைப்புக்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என என இவர் தீர்மானித்தார். அந்த தொழில் மூலம் தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய கொரோனாவை பழி வாங்கவும் அவர் திட்டமிட்டார். இது தொடர்பாக அவர் தீவிரமாக ஆலோசித்த போது தான் ஆன்லைனில் உலக சுகாதார அமைப்பின் சார்பில் நடத்தப்படும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் கிருமிநாசினி தெளிப்பு குறித்த ஒரு படிப்பு இருப்பதை தெரிந்து கொண்டார்.

ஆன்லைனில் கடந்த இரு வாரங்களாக நடந்த வகுப்பில் அவர் கலந்து கொண்டார். கிருமிநாசினி தெளிப்பது குறித்து வீடியோ காட்சிகளைப் பார்த்து அவர் தெரிந்து கொண்டார். வெற்றிகரமாக படிப்பை முடித்த அவருக்கு உலக சுகாதார அமைப்பின் சான்றிதழும் கிடைத்தது. தொடர்ந்து கிருமிநாசினி தெளிப்பதற்கான உபகரணங்களையும் பிஜு வாங்கினார். தற்போது இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள், கடைகள், தனியார் நிறுவனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எப்படியாவது தன்னுடைய பகுதியில் கொரோனாவை மேலும் பரவவிடாமல் தடுப்பதே தன்னுடைய லட்சியம் என்று பிஜு கூறுகிறார்.

You'r reading இதுதான் என் லட்சியம் - கொரோனாவால் கஷ்டப்பட்ட இளைஞரின் சபதம்...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்