கொரோனாவால் கூட தடுக்க முடியவில்லை மருத்துவமனையில் வைத்து நடந்த திருமணம் !

Covid observatory wedding in kochi

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் கேரளாவில் இளம்பெண்ணுக்கு ஏற்கனவே நிச்சயித்தபடி கொரோனா சிகிச்சை மையத்தில் வைத்து திருமணம் நடந்தது.

கொரோனாவால் பலரது திருமண கனவுகளும் சிதைந்து போய்விட்டன. ஆயிரம் பேரை அழைத்து தடபுடல் விருந்துடன் ஆடம்பரமாக திருமணம் நடத்த வேண்டும் என்று கனவு கண்டவர்கள் வெறும் 50 பேருடன் திருமணத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி யூடியூப்பில் திருமணத்தை பார்க்க வேண்டிய நிலையும் உருவாகி உள்ளது. கொரோனா பரவலின் தொடக்க கட்டத்தில் நிலைமை உடனடியாக சீரடைந்து விடும் என கருதி பல திருமணங்கள் சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் கொரோனாவின் தாண்டவம் குறையாததால் வேறு வழியின்றி பலரும் குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை அழைத்து திருமணத்தை நடத்தினர்.


இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் கொரோனா சிகிச்சை மையத்தில் வைத்து நோய் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. கொச்சி பள்ளிப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் லுக்மான். இவரது மகள் பாயிஷா (19). இவருக்கும் கொச்சியை சேர்ந்த நாசர் என்பவரின் மகன் நியாஸுக்கும் (24) நேற்று திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக கடந்த சில தினங்களுக்கு முன் பாயிஷாவுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து பரிசோதனை நடத்தியபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கொச்சி மட்டாஞ்சேரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு சில நாட்களிலேயே அவருக்கு நோய் குணமானது. இதனால் குறிப்பிட்ட தேதியிலேயே இவர்களது திருமணத்தை நடத்த உறவினர்கள் தீர்மானித்தனர். இதன்படி சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன் நேற்று கொரோனா சிகிச்சை மையத்திலுள்ள அரங்கத்தில் வைத்து இவர்களது திருமணம் நடந்தது. மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். நாளை தான் மணமகள் பாயிஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading கொரோனாவால் கூட தடுக்க முடியவில்லை மருத்துவமனையில் வைத்து நடந்த திருமணம் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆஸ்துமாவை குணப்படுத்த சிறுத்தை இறைச்சி விற்பனை 3 பேர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்