2 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண் கடலில் இருந்து உயிருடன் மீட்பு

Woman who went missing 2 years ago found floating alive at sea

கொலம்பியாவில் கணவருடன் தகராறு ஏற்பட்டதால் 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண் கடலில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.கொலம்பியாவைச் சேர்ந்தவர் ஏஞ்சலிக்கா கெய்டான் (33). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கெய்தானுக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட தகராறில் கெய்டான் வீட்டை விட்டு மாயமானார். அவரை எங்குத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கெய்டானின் கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கொலம்பியாவைச் சேர்ந்த ரொனால்டோ விஸ்பர் மற்றும் அவரது நண்பர்கள் மீன்பிடிப்பதற்காக ஒரு படகில் கடலுக்குச் சென்றனர். பியூர்டோ கொலம்பியா கடல் பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிறிது தொலைவில் ஏதோ ஒரு பொருள் மிதப்பதைப் பார்த்தனர். அது மரத்தடியாக இருக்கலாம் என்று தான் அவர்கள் முதலில் கருதினர். ஆனால் அருகில் சென்று பார்த்தபோது தான் ஒரு பெண் மிதப்பது தெரியவந்தது. உடனடியாக விரைந்து செயல்பட்டு அவர்கள் அந்த பெண்ணை மீட்டனர்.

அவரிடம் விசாரித்தபோது தான் கடந்த 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன கெய்டான் எனத் தெரியவந்தது. கணவனிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவர் வேறு ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்துள்ளார். மன விரக்தி ஏற்பட்டதால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக அவர் கூறினார். அந்த இளம்பெண்ணைக் கடலிலிருந்து மீட்கும் காட்சிகள் தற்போது சமூக இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

You'r reading 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண் கடலில் இருந்து உயிருடன் மீட்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு, கொல்கத்தா முற்றுப்புள்ளி வைக்குமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்