லாக்டவுனில் முன்பதிவு செய்த விமான டிக்கெட் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SC orders airlines to refund cancelled bookings during lockdown within 15 days

லாக்டவுன் காலத்தில் விமானத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்த பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பிக் கொடுக்க விமான நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவில் மார்ச் 25-ம் தேதி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து 2 மாதங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. இந்த நாட்களில் ஏராளமானோர் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். விமான சேவை நிறுத்தப்பட்டதால் டிக்கெட் பணத்தை திரும்பத் தரக்கோரி பயணிகள் விமான நிறுவனங்களிடம் விண்ணப்பித்தனர். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டன. இதையடுத்து விமான பயணிகள் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 3 பேர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மார்ச் 25 முதல் மே 24 வரை முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான பணத்தை பயணிகளுக்கு திருப்பிக்கொடுக்க விமான நிறுவனங்களுக்கு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.


நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறுகையில், முன்பதிவு செய்த 2 மாதங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை 15 நாட்களுக்குள் பயணிகளுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். நிதி நெருக்கடியில் தவிக்கும் விமான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு (2021) மார்ச் 31 வரை அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தும் வகையில் கிரெடிட் முறையை ஏற்படுத்தலாம். இந்தக் கிரெடிட் முறையின் படி டிக்கெட்டை டிரான்ஸ்பர் செய்யவும் வசதி ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அந்த விமான நிறுவனம் சர்வீஸ் நடத்துகின்ற எந்த பகுதிக்கும் பயணம் செய்ய முடியும். இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டு மார்ச் வரை மாதந்தோறும் டிக்கெட் கட்டணத்திற்கான வட்டியை கிரெடிட்டில் சேர்க்க வேண்டும். மார்ச் மாதம் வரை இந்த கிரெடிட்டை பயன்படுத்தாவிட்டாலும் டிக்கெட்டுக்கான தொகையை குறிப்பிட்ட பயணிக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். டிராவல் ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் டிராவல் ஏஜென்சி மூலமே பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

You'r reading லாக்டவுனில் முன்பதிவு செய்த விமான டிக்கெட் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அசரவைக்கும் நாவல் பழத்தின் சத்துக்கள்!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்