அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு சொப்னாவுக்கு ஜாமீன்.

Gold smuggling case, swapna suresh got bail from customs case

திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது தொடர்பாக சுங்க இலாகா தொடர்ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் துபாயில் இருந்து தங்கம் கடத்திய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அமீரக தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக முதலில் சுங்க இலாகாவும், பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகியவை வழக்கு பதிவு செய்தன.


இந்நிலையில் இந்த மூன்று மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்த வழக்கிலிருந்து ஜாமீன் கோரி ஸ்வப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் சுங்க இலாகா தொடர்ந்த வழக்கிலிருந்து ஜாமீன் கோரி அவர் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அவருக்கு எதிராக என்ஐஏ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகள் இருப்பதால் தற்போதைக்கு ஸ்வப்னாவால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது.


இதற்கிடையே என்ஐஏ தொடர்ந்த வழக்கிலிருந்து ஜாமீன் கோரி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களும் இன்று கொச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்க கடத்தல் தொடர்பாக என்ஐஏ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அனைவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டியது ஏற்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக கிடைத்த ஆவணங்களை உடனடியாக தாக்கல் செய்வதாக என்ஐஏ உறுதியளித்தது.

You'r reading அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு சொப்னாவுக்கு ஜாமீன். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மெரினாவில் இம்மாத இறுதிவரை மக்களுக்கு அனுமதி இல்லை: மாநகராட்சி தகவல்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்