சபரிமலையில் மண்டல காலம் முதல் பக்தர்களுக்கு அனுமதி நிபந்தனைகள் என்னென்ன?

Covid negative certificate for compulsory for sabarimalai devotees

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல பூஜையை முன்னிட்டு தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.கொரோனா லாக்டவுனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் கடந்த மாதம் வரை எல்லா மாதத்திலும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் வழக்கம் போல நடைபெற்று வருகின்றன. ஆனால் பக்தர்களால் தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் லாக்டவுன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களை அனுமதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருப்பதி உட்பட நாடு முழுவதும் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலையிலும் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. நவம்பர் மாதம் முதல் சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டலக் கால பூஜைகள் தொடங்குகின்றன. இதையொட்டி குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களை நிபந்தனைகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது குறித்துத் தீர்மானிக்கக் கேரள தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு இன்று கேரள அரசிடம் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் கூறியது: திருப்பதி போலவே இம்முறை ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். முன்பதிவு செய்யும்போது 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை இணைக்க வேண்டும். மேலும் கேரள அரசின் 'கோவிட்-19 கேரளா ஜாக்ரதா' என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சபரிமலை வந்த பின்னரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்படும். இதற்கான கட்டணத்தைப் பக்தர்கள் செலுத்த வேண்டும். இம்முறை பம்பை வழியாக மட்டுமே பக்தர்கள் தன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எருமேலி, புல் மேடு உள்பட அனைத்து வனப்பாதைகளும் மூடப்படும். பம்பை ஆற்றில் குளிப்பதற்குப் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பம்பையிலும், சன்னிதானத்திலும் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை. தரிசனம் முடிந்தவுடன் திரும்பிச் சென்றுவிட வேண்டும்.
நெய்யபிஷேகம் நடத்த அனுமதி உண்டு.

மண்டல பூஜை தொடக்கக் கட்டத்தில் தினமும் 1,000 பேர் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக 2,000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த கட்டத்தில் தினமும் 5,000 பேர் வரை தரிசனம் செய்யலாம். 10 வயதுக்குக் கீழ் உள்ள மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தரிசனத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கண்டிப்பாகத் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன், உடல் பரிசோதனை சான்றிதழையும் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading சபரிமலையில் மண்டல காலம் முதல் பக்தர்களுக்கு அனுமதி நிபந்தனைகள் என்னென்ன? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தள்ளி வைக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டியின் கூட்டம் நாளை துவங்குகிறது...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்