பஞ்சாப் சட்டசபைக்குள் ஆம்ஆத்மி எம்.எல்ஏ.க்கள் விடிய விடிய போராட்டம்..

Punjab Aam Aadmi Party MLAs Spend Night In Assembly Over Farm Bill.

பஞ்சாப்பில் சட்டசபைக்குள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நேற்றிரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரவிருக்கிறது. இந்த சட்டத்தின்படி, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் அம்மாநிலத்தில் அமல்படுத்த விடாமல் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.இந்த சட்ட மசோதாக்களின் நகல்களைக் கேட்டு, முக்கிய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நேற்று(அக்.19) சட்டசபையில் போராட்டம் நடத்தினர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா செய்தனர். மாலையில் சட்டசபை முடிந்த பின்பும் அவர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்தனர்.

அதன்பின், இரவு முழுக்க சபைக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இரவு அங்கேயே படுத்துத் தூங்கினர். ஆம்ஆத்மியின் சட்டசபை தலைவர் ஹர்பால் சீமா கூறுகையில், சட்டத்தின் நகல்களை முன்கூட்டியே அளித்தால்தான் அவற்றைப் படித்து விரிவாக விவாதிக்க இயலும். ஆனால், காங்கிரஸ் அரசு எந்த மசோதாக்களையும் தரவில்லை என்றார். வேளாண் சட்டங்களை எதிர்த்து மத்திய அரசில் இருந்து விலகிய சிரோமணி அகாலிதளம் கட்சி, பஞ்சாப்பில் காங்கிரஸ் அரசு கொண்டு வரும் மசோதாக்களை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறது.

You'r reading பஞ்சாப் சட்டசபைக்குள் ஆம்ஆத்மி எம்.எல்ஏ.க்கள் விடிய விடிய போராட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்.. ஜே.பி.நட்டா உறுதி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்