பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவதாக கூறி ஓட்டு கேட்பதா? பிரதமர் மோடி கண்டனம்..

Opposition insulting Bihar martyrs says PM Modi.

காஷ்மீருக்கான அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்லி, ஓட்டு கேட்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு எப்படி துணிச்சல் வந்தது என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது. இதையடுத்து, அங்கு 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று பீகாரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஷசாராம் தொகுதியில் நடைபெற்ற ஆளும் கூட்டணி பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். முதல்வர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார். அப்போது மோடி பேசியதாவது:பீகாரில் மீண்டும் எங்கள் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.ஆனால், ஏதோ புதிதாக ஒரு மாற்றம் ஏற்படப் போவது போல் சிலர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்க வேண்டுமென நாடு எவ்வளவு காலமாகக் காத்திருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் அதை நீக்கியிருக்கிறோம். ஆனால், இப்போது அதை மீண்டும் கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. அப்படிப் பேசிவிட்டு பீகாரில் ஓட்டு கேட்டு வருவதற்கு அவர்களுக்கு எப்படித் துணிவு வருகிறது. பீகார் மக்கள் தங்கள் மகன்களை எல்லைக்கு அனுப்பி, நாட்டை பாதுகாத்திருக்கிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் 370வது பிரிவை நீக்குவோம் என்று பேசுகிறார்கள்.மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த 10 ஆண்டுகளில் பீகாருக்கு எதுவுமே செய்யவில்லை. அவர்கள் நிதிஷ்குமார் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்பட விடாமல் தடுத்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இப்போது பீகாரில் பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.இவ்வாறு மோடி பேசினார்.

ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி, பாஜக தொகுதிகளில் மட்டும் அந்த கட்சியை ஆதரிக்கிறது. அதே சமயம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அதை எதிர்த்துப் போட்டியிடுகிறது.
பிரதமர் பேசுகையில், ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான் கூட்டணியை விட்டு வெளியேறியது பற்றியோ, லோக்ஜனசக்தி தனியாகப் போட்டியிடுவது பற்றியோ ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.

You'r reading பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவதாக கூறி ஓட்டு கேட்பதா? பிரதமர் மோடி கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரயிலில் தொங்கியபடி பிரபல ஜோடி காதல்.. ஹீரோ ஸ்பெஷல் வீடியோ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்