10 லட்சம் வேலை.. கடன்தள்ளுபடி.. ஆர்ஜேடி பலே தேர்தல் அறிக்கை..

Ten lakh jobs, free laptops to farm loan waiver in RJD manifesto.

பீகாரில் லாலு கட்சியின் தேர்தல் அறிக்கையில் 10 லட்சம் அரசு வேலை, பழைய ஓய்வூதியம், விவசாய மற்றும் கல்விக் கடன் தள்ளுபடி என்று பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிகிறது. அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணியில் இருந்து, ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி விலகி, தனியாக போட்டியிடுகிறது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பீகாரில் வேலைவாய்ப்பு இல்லாமல் வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள், கொரோனா காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஊர் திரும்பினார்கள். இந்த சூழலில், வேலைவாய்ப்பு ஒரு மிகப் பெரிய பிரச்னையாக இந்த தேர்தலில் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தேஜஸ்வி யாதவ் இன்று(அக்.24) கட்சியின் தேர்தல் அறிக்கையை பாட்னாவில் வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: ஆட்சி அமைத்தால், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும். அரசு வேலைகளில் பீகாரிகளுக்கு 85 சதவீத ஒதுக்கீடு, அரசு வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் ரத்து, இளைஞர்களுக்கு தனி வாரியம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரம், 5 லட்சம் வரையான கல்விக் கடன்கள் தள்ளுபடி, 2020க்கு முன்பு பெற்ற விவசாயக் கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் போனஸ் என்று பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும், புதிய தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் தொழிற்கொள்கை, ஒவ்வொரு ஊராட்சியிலும் சிசிடிவி, ஆம்புலன்ஸ் சேவை, மாவட்டந்தோறும் டயாலிசஸ் மையம் என்று பல்வேறு அறிவிப்புகளும் மக்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன.

You'r reading 10 லட்சம் வேலை.. கடன்தள்ளுபடி.. ஆர்ஜேடி பலே தேர்தல் அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிக் பாஸின் வெற்றியாளர் யாருன்னு தெரியுமா?? அர்ச்சனாவை டார்கெட் செய்யும் பாலாஜி.. பிக் பாஸின் 20வது நாள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்