பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயரும்?

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க மத்திய அரசு சில கூடுதல் சிறப்பு நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கான கூடுதல் நிதி தேவையை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 முதல் 6 வரை மத்திய அரசு உயர்த்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கோடி முதல் ரூ.60,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றம் இன்றி ஒரே நிலை நீடித்து இருந்து வருகிறது.

எனவே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்த இதுவே சரியான தருணம் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விரைவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 ம் டீசல் லிட்டருக்கு ரூ.3 ம் உயர வாய்ப்பு உள்ளது.பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனத் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. லாரி தொழிலை நடத்த முடியாமல் திணறி வரும் இந்த சூழலில் கலால் வரியை மத்திய அரசு உயர்த்த இருப்பதாகத் தெரியவருகிறது. கலால் வரி உயரும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும். எனவே மத்திய அரசு டீசல், பெட்ரோல் மீதான கலால் வரி யை உயர்த்தும் முடிவைக் கைவிட வேண்டும் எனத் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

You'r reading பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயரும்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தங்க வேட்டையில் களமிறங்கிய போட்டியாளர்கள் - பிக் பாஸ் நாள் 24

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்