இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சர்வீஸ்களுக்கு நவம்பர் 30 வரை தடை தொடரும்.

கொரோனா பரவலை தொடர்ந்து இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சர்வீஸ்களுக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 30 வரை தொடரும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா கொள்ளை நோய் பரவலை தொடர்ந்து மார்ச் 23ம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் என்ற திட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட சில நாடுகளுக்கு விமானங்களை இயக்கியது. இதற்கிடையே மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக வெளிநாடுகளுக்கு வழக்கமான சர்வீஸ் எதுவும் இயக்கப்படாமல் இருந்து வந்தது. நவம்பர் முதல் வழக்கம்போல அனைத்து நாடுகளுக்கும் விமான சர்வீஸ் தொடங்க வாய்ப்பு இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் சர்வதேச விமான சர்வீஸ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இன்று அறிவித்துள்ளது.இதற்கிடையே இந்தியா சில குறிப்பிட்ட நாடுகளுடன் ஏர் பபிள் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், கென்யா, பூடான் மற்றும் பிரான்ஸ் உள்பட 18 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த விமான போக்குவரத்து வழக்கம்போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சிறப்பு விமான சேவைகள் உட்பட அவசிய தேவைகளுக்கான விமான சர்வீசும் வழக்கம்போல நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சர்வீஸ்களுக்கு நவம்பர் 30 வரை தடை தொடரும். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரை பல்கலை தேர்வு முறைகேடுகள்: சிபிசிஐடி விசாரிக்க கோரி வழக்கு.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்