ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு : ஆனாலும் ஆர்வமில்லை

பல மாத இடைவெளிக்குப் பிறகு ஆந்திராவில் இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் இதற்குப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே போதிய வரவேற்பு இல்லை

ஆந்திர மாநிலத்தில் சோதனை முறையில் சிகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவடத்தில் கடந்த அக்டோபர் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட இரண்டு நாளிலேயே விஜயநகரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. அத்துடன் மாணவ, மாணவிகளுக்குப் புத்தகம், சீருடைகள் மட்டும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் விஜயநகரத்தில் ஒரு பள்ளியில் சந்தேகம் கேட்க வந்த 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. பள்ளிக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆந்திராவில் இன்று மீண்டும் மாநிலம் முழுவதும் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அடுத்த வாரத்தில் 6,7,8 வகுப்புகளுக்கும், டிசம்பரில் முதல் வாரத்தில் இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் 1,3,5 வகுப்புகளும் 2, 4 வகுப்புகளும் நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அரசின் இந்த முடிவுக்குத் தனியார்ப் பள்ளி உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. பல தனியார் பள்ளிகள் இன்று பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளிப் பேருந்துகள் இயக்கக் கூடாது, குளிர்சாதன பள்ளிகளைப் பயன்படுத்தக் கூடாது, ஜன்னல்கள் திறக்கப்பட்டு இருக்க வேண்டும், கட்டாய முகக்கவசம் என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு வைத்துள்ளதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. எனவே மூன்று நாட்களுக்கு அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மற்றும் பெற்றோர்களின் ஆதரவைப் பொறுத்து தனியார் பள்ளிகளைத் திறக்க தனியார் பள்ளி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆயினும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் ஆர்வம் இல்லாத நிலையில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளி இன்றி கல்வி கற்பது இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தற்போது பள்ளிகளை திறப்பதை காட்டிலும் தொடர்ந்து ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

You'r reading ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு : ஆனாலும் ஆர்வமில்லை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்றைய தங்கத்தின் விலை 02-11-2020!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்