போலி என்கவுண்டரில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கேரள மாநிலம் வயநாட்டில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும், இது தொடர்பாக நீதி கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் போவதாகவும் வேல்முருகனின் சகோதரர் முருகன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், இடுக்கி மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அடிக்கடி போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெறுவது உண்டு. கடந்த 5 வருடங்களில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் 5 பேர் போலீசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர். கடந்த வருடம் வயநாடு மாவட்டம் வைத்திரி என்ற இடத்தில் உள்ள சுற்றுலா விடுதியில் மாவோயிஸ்டுகள் புகுந்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜலீல் என்ற மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார். அவருடன் வந்த 5க்கும் மேற்பட்டவர்கள் காட்டுக்குள் தப்பி ஓடினர்.இந்நிலையில் வயநாடு மாவட்டம் படிஞ்சாரேத்தரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாகக் கேரள அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கும், அங்குப் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் கொல்லப்பட்டது தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் எனத் தெரியவந்தது. இவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் நேற்று இரவு வேல்முருகனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்குவதற்காக வேல்முருகனின் தாய் கண்ணம்மாள், சகோதரர் முருகன் ஆகியோர் சென்றிருந்தனர்.

வேல்முருகனின் உறவினர்கள் வரும் வரை உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது எனக் கேரள போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது உறவினர்கள் சென்ற பின்னரே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. முதலில் வேல்முருகனின் முகத்தை மட்டுமே பார்க்கக் கேரள போலீசார் அனுமதித்தனர். ஆனால் உடல் முழுவதையும் பார்க்க வேண்டும் என்று உறவினர்கள் கூறினர். அதற்கு போலீசார் அனுமதித்தனர். அப்போது அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வேல்முருகனின் சகோதரரும், மதுரையில் வக்கீலாக பணிபுரிந்து வருபவருமான முருகன் கூறுகையில், வேல்முருகன் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளார். உடலைப் பார்க்கும் போது மிக அருகிலிருந்து சுட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. உடல் முழுவதும் குண்டுகள் துளைத்துள்ளன. எனவே இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்று கூறினார். இதற்கிடையே வேல்முருகனின் உடல் நேற்று இரவு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று மதுரையில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. கேரள எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னித்தலாவும் இது ஒரு போலி என்கவுண்டர் எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading போலி என்கவுண்டரில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்! நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்