சபரிமலையில் பூஜை நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை நேரங்களில் பக்தர்கள் 18ம் படி ஏறவும், தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் இரவில் படி பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக குறைவாகவே காணப்படுகிறது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லாமல், எந்த சிரமமும் இன்றி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். மேலும் இவ்வருடம் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தரிசன நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மண்டல காலத்தில் தினமும் 17 மணி நேரத்திற்கும் அதிகமாக நடை திறந்திருக்கும். ஆனால் இம்முறை 12 மணி நேரம் மட்டுமே நடை திறக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கடந்த வருடம் வரை பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருந்ததால் பூஜை நேரங்களிலும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை பூஜை நேரங்களில் பக்தர்கள் 18ம்படி ஏறவும், தரிசனம் செய்யும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் காலையில் 5 மணிக்கு நடை திறந்த பின்னர் நிர்மால்ய தரிசனமும், கணபதி ஹோமமும் நடைபெறும். வழக்கமாக இந்த பூஜைகள் நடைபெறும் போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது காலையில் நடை திறந்து 45 நிமிடங்களுக்கு பின்னரே பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதே போல காலையில் உஷ பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜை நடைபெறும் 7 மணி முதல் 9 மணி வரையிலும், களபாபிஷேகம் நடைபெறும் பகல் 12 முதல் 1 மணி வரையிலும், புஷ்பாபிஷேகம் நடைபெறும் மாலை 6 முதல் 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை சாத்தப்படும். இதனால் 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 8மணிக்கு பின்னர் பக்தர்கள் சன்னிதானத்தில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். இதற்கிடையே நேற்று முதல் சபரிமலையில் முக்கிய பூஜையான படி பூஜை தொடங்கியுள்ளது. படிபூஜை நடைபெறும் போதும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. தினமும் அதிகாலை 3 மணிக்கு பின்னர் மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனனர். சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாலை 5 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதி இல்லை.

You'r reading சபரிமலையில் பூஜை நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்.. தினேஷ் குண்டுராவ் பேட்டி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்